நொய்யல் நதியின் முக்கியத் துணை நதியாக, காட்டாற்று வெள்ளத்தினைத் தன் தன்மையெனக் கொண்டு பல நூறு கோடி ஆண்டுகளாகக் கொங்கு மண்ணில் உருண்டோடி அதனைச் செழிப்புக்குள்ளாக்கி வந்த சங்கனூர் பள்ளமானது, மானுட இனத்தைச் சார்ந்த ஒரு சிலரின் பேராசை நோயால் தாக்கப்பட்டு வெறும் 25 ஆண்டுகளில் முழுமையாக முடமாக்கப் பட்டுள்ளது.
1957 ஆம் ஆண்டின் மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம சட்டம் (Mines and Minerals (Development &Regulation) Act, 1957), 1959 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சிறுகனிமங்களுக்கான சலுகை விதிகள் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959), மத்திய அரசின் 1977 ஆம் ஆண்டின் தண்ணீர் (மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) தீர்வைச் சட்டம் (The Water (Prevention & Control of Pollution) Cess Act,1977), 1981 ஆம் ஆண்டின் மத்திய அரசின் காற்று (மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் (Air (Prevention and Control of Pollution) Act 1981), மத்திய அரசின் 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் (Environment Protection Act, 1986) ஆகியவை இருந்தும் கூட அந்த சட்டங்களை மாவட்ட நிர்வாகம் தடாகம் பள்ளத்தாக்கில் அமலாக்காமல் இருந்துவிட்ட காரணத்தாலேயே இந்தப் பேரழிவு நிகழ்ந்துள்ளது.
29.10.2019 அன்று கோவை மாவட்ட ஆட்சியர், சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளை மூடும்படியும், மூடாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பை செங்கல் முதலாளிகள் கண்டுகொள்ளவில்லை. எனினும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அடுத்து வந்த 15 மாதங்களில் எடுக்கத் தவறியது. இந்தக் காலகட்டத்தில்தான் பள்ளத்தாகின் நீர் நிலைகளும், உயிரினங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.
உள்ளூர் பெரியவர் ஒருவராலும், வன விலங்கு ஆர்வலர் ஒருவராலும் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் முன்வைக்கப்பட்ட தீர்ப்புகளின் காரணமாக 19.03.2021 அன்று தடாகம் செங்கல் தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடி, முத்திரையிட வேண்டிய நிர்ப்பந்தம் மாவட்ட நிர்வாகத்திற்கு உருவானது. சட்டத்திறகுப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகள் அந்த தேதியில் மூடி, முத்திரையிடப்பட்டிருந்தாலும் கூட, அவற்றின் தொழிற் கூடங்களில் அரசு அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த கனிமங்களையும், வாகனம் மற்றும் கருவிகளையும் கையகப் படுத்தி, உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஆணையை இன்றளவும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை.
தினமலர் செய்தித் தாளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் 6.4.2021 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடாகம் பிரச்சினையைத் தானாகவே முன்வந்து தனது வழக்காக எடுத்துக் கொண்டது. செங்கல் தொழிற்சாலைகளின் செம்மண் சுரங்கங்களால் பள்ளத்தாக்கின் நீர் நிலைகளுக்கும், நிலத்தடி நீருக்கும், வேளாண் தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய தீர்ப்பாயத்தால் உருவாக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டுக்குழு 25.07.2022 அன்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையானது, பள்ளத்தாக்கின் நீர்நிலைகள் செங்கல் தொழிற்சாலைகளால் சிதைக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறது. என்றாலும்கூட, அவை எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளன என்பதையும், அழிவுக்குள்ளான நீர்நிலைகளை எவ்வாறு சரி செய்வது என்பதையும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையைத் தீர்ப்பாயத்திடம் முன் வைத்துள்ளது. தனது அறிக்கை இடைக்கால அறிக்கைதான் என்றும், எளிதில் செல்லமுடியாத பகுதிகள், காடடர்ந்த பகுதிகள், கடுமையான மேடு-பள்ளப் பகுதிகள் ஆகியவற்றில் உள்ள செம்மண் சுரங்கங்களை அளவீடு செய்யவில்லை என்றும் அது கூறுகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வந்த செங்கல் தொழிற்சாலைகளால் தோண்டப்பட்ட சுரங்கங்களில் 565 செம்மண் சுரங்கங்களைத் தான் அளவீடு/மதிப்பீடு செய்திருப்பதாகக் கூறுகிறது. இவற்றில் இருந்து 1,10,77,276 கன மீட்டர் செம்மண் தோண்டப்பட்டது என்றும், இதன் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ள சூழலியல் பாதிப்பிற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக ரூ.373.74,20,825 -கோடியை அது முன்வைத்துள்ளது.
05.01.2022 அன்று தீர்ப்பாயத்திடம் கூட்டுக் குழுவானது இடைக்கால நிலை அறிக்கை ஒன்றை முன்வைத்தது. அதில், 600க்கும் சற்று கூடுதலான (600 plus) புலங்களை அளவீடு செய்திருப்பதாகவும், இதில் இருந்து பெறப்பட்ட மேலதிகமான தரவுகளை ஒழுங்கீடு செய்து, அவற்றிற்கான வரைபடங்களை முடிப்பதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை என்றும் முறையிட்டது. இறுதி அறிக்கையை முன்வைப்பதற்கான காலக்கெடுவை தீர்ப்பாயம் நீட்டிக் கொடுத்தது. கூட்டுக் குழுவின் அளவீடு மற்றும் மதிப்பீடுக்கான பணிகள் 10.03.2022 அன்று முடிவடைந்தன. என்றாலும்கூட, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சூத்திரத்தின் அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பான சூளைகளின் மாசுபாட்டால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியதால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கான காலம் 13.07.2022 தேதிக்கு தள்ளிப்போனது. தடாகம் பள்ளத்தாக்கில் சட்டத்திற்குப் புறம்பாக தோண்டப்பட்டு கடத்தப்பட்ட மண்ணிற்கான தன் இறுதி அறிக்கையை 12.07.2022 அன்று கோவை வடக்குத் தாலுகாவின் தாசில்தார் கூட்டுக்குழுவிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் 19.07.2022 அன்று கூட்டுக் குழு தன் இறுதி அறிக்கையை உறுதி செய்தது. 25.07.2022 அன்று அதனைத் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்தது. அதன் மீதான வாதங்கள் 29.08.2022 தேதி நடக்கவுள்ள பசுமைத்தீர்ப்பாய அமர்வில் நிகழும்.
04.01.2022 க்கும் 25.07.2022 க்கும் இடைப்பட்ட 200 நாட்களில், தன்னால் அளவீடு செய்யப்பட்ட சுரங்கங்கங்களின் எண்ணிக்கையை 600-க்கும் சற்றுக் கூடுதலில் இருந்து 565 ஆகக் கூட்டுக்குழு குறைத்திருக்கிறது. இவ்வாறு குறைத்திருக்கும் செயல்பாட்டைத் தன் அறிக்கையில் அது சுட்டிக் காட்டவில்லை. மேலும், இதற்கான காரணத்தையும் தன் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
565 சுரங்கங்களின் புல எண்களையும், அவற்றில் இருந்து அள்ளப்பட்ட மண்ணின் கொள்ளளவையும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அந்தக் கொள்ளளவை அளவீடு செய்யத் தேவைடுப்படும் ஒவ்வொரு சுரங்கத்தின் பரப்பளவையும், ஆழத்தையும் அது தெரிவிக்கவில்லை. சுரங்கங்கள் அமைந்திருக்கும் அட்ச/மகர ரேகை எண்களை அளிக்கவில்லை. எனவே, கூட்டுக்குழுவினால் அளவீடு செய்யப்பட்டுள்ள மண்ணின் கொள்ளளவு உண்மையானதுதானா அல்லது கற்பனை அளவீடா என்ற சந்தேகம் எழுகின்றது. செயற்கைக்கோள் படிமங்களின் அடிப்படையில் இதனை மறு பரிசீலனை செய்வதற்கு இடர்பாட்டை இது உருவாக்கியுள்ளது.
செங்கல் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான, இயக்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் 17.10.2019 தேதியில் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட நாளான 19.03.2021 வரை வாங்கவில்லை என்பதால் இந்த 519 நாட்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக 185 சூளைகளுக்கு ரூ.59.3231 கோடியை அபராதத் தொகையாக வாரியம் முன்வத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் காற்றிலும், நிலத்திலும் விடப்பட்ட மாசுபாட்டிற்கான அபராதத் தொகையே இது.
கடந்த 25 ஆண்டுகளாக மனித வாழ்விடங்களை அடுத்தே நிறுவப்பட்டுள்ள சூளைகளினால் ஏற்பட்ட மாசுபாட்டினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நுரையீரல்/தொண்டை புற்று நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, ஆஸ்துமா, நாள்பட்ட தோல் நோய்கள் ஆகியவற்றால் இன்று வரை அவதிப்பட்டு வருபவர்களுக்கு, மரணமடைந்தோக்குரின் சுற்றத்திற்கு இந்த அபராதத் தொகையால் ஏதும் பயன் கிடைக்குமா? மாசுபாட்டினால் இறந்துபோன ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கான இழப்பீட்டை எவ்வாறு தீர்மாணிப்பது? 2006 ஆம் ஆண்டிலிருந்து செங்கல் தொழிற்சாலைகளின் செயல்பாட்டால் சங்கனூர் பள்ளத்தில் நீர் ஒழுக்கு இல்லாமல் போனதால் அடியோடு நின்றுபோன சின்னவேடம்பட்டி ஏரியின் 2200 ஹெக்டேர் வேளாண் பணிகளுக்கு இழப்பீட்டை யார் கொடுக்கப் போகிறார்கள்?
சட்டத்திற்குப் புறம்பாக கடந்த 25 ஆண்டுகள் இறைக்கப்பட்ட நிலத்தடி நீருக்கும், செங்கல் கனரக வாகனங்களால் சாலைகளாக மாற்றப்பட்டு, கெட்டியாக்கப்பட்டு அழிக்கப்பட்ட நீரோடைகளின் தரையை மீட்பதற்குமான இழப்பீட்டை யார் விதிப்பது? இவ்வாறு கெட்டியாக்கப்பட்ட தரையில் ஓடிய காட்டாற்றினால் ஒவ்வொரு மழையின் போதும் ஆண்டு முழுதும் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட கோடிக்கணக்கான கன அடி மண்அரிப்புக்கு இழப்பீடு என்ன?
தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான செங்கல் சூளைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து 21.02.2013, 27.01.2016 ஆகிய தேதிகளிலேயே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடிதங்களையும், குறிப்பாணைகளையும் எழுதியுள்ளது. எனவே, ஆவணங்களின்படி 2431 நாட்களுக்கான சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை (ரூ.277.87 கோடி) முன்வைப்பதற்கு பதிலாக, வெறும் 519 நாட்களுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகையை அது பரிந்துரை செய்துள்ளது. மேலும், கூகுள் எர்த் மென்பொருளைக் கொண்டு இந்தப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கிவரும் செங்கல் சூளைகளை 2006 ஆம் ஆண்டிலிருந்தே கணக்கிட்டுவிட முடியும் (5550 நாட்களுக்கு ரூ.634.53 கோடி(1)) - . 2021 டிசம்பரில் நான் எழுதி மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் சமர்ப்பித்த எனது புத்தகத்தில் தடாகம் பள்ளத்தாக்கின் தென் கிழக்கில் அமைந்துள்ள அனுவாவி-கருப்பராயன் நீரோடையைச் சுற்றியுள்ள சூளைகளைப் பற்றிய தகவல்களை 2006 ஆம் ஆண்டிலிருந்தே கூகுள் எர்த் மென்பொருளின் செயற்கைக்கோள் படிமங்களில் இருந்து இதனை எவ்வாறு பெற முடியும் என்பதை எழுதியுள்ளேன். இருந்தும், வெறும் 519 நட்களுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக மாசுக்கட்டுப்பாட்டு வரியம் கணக்கிட்டுள்ளதை எவ்வாறு புரிந்து கொள்வது?
2021 டிசம்பர் மாதம் நான் எழுதி முடித்து 4.1.2022 அன்று மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த “Stuck in the Days of Abundance - The Strange Case of Streams of Thadagam Valley” புத்தகம் குறித்து ஆட்சியர் தலைமையிலான கூட்டு அறிக்கையில் குறிப்புகள் ஏதும் இல்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான செம்மண் சுரங்கங்களை அளவிடுதல் பணியை முன்னின்று நடத்திய மாவட்ட வருவாய் துறை அதிகாரியிடமும் என் புத்தகத்தை அதே தேதியில் சமர்ப்பித்திருந்தேன்.
பெரியதடாகம் - காளையனூர் பகுதியில் ஆய்வு செய்து எனது புத்தகத்தில் நான் தெரியப்படுத்தியிருந்த 8,12,344 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட, 36,69,749 கன மீட்டர் அளவிற்கு செம்மண் எடுக்கப்பட்ட 47 சுரங்கங்களில் வெறும் 9 சுரங்கங்களை மட்டுமே கூட்டுக்குழு அளவீடு செய்திருக்கிறது.
இந்தப்பகுதியில் உள்ள செம்மண் சுரங்கங்கள் மேற்கில் உள்ள பெரியதாடாகம் கூட்டுச் சுரங்கம் (Periyathadagam Cluster) என்றும்,கிழக்கில் அமைந்துள்ள காளையனூர் கூட்டுச் சுரங்கம் (Kalayanur Cluster) என்றும் இரண்டாகப் பிரிந்து அமைந்துள்ளன. பெரியதடாகம் கூட்டுச் சுரங்கத்தில் 21 சுரங்கங்கங்களும், காளையனூர் கூட்டுச் சுரங்கத்தில் 26 சுரங்கங்களும் உள்ளன.
பெரியதடாகம் கூட்டுச் சுரங்கத்தில் உள்ள 21 சுரங்கங்களில் 9 சுரங்கங்களை மட்டுமே கூட்டுக்குழு அளவீடு செய்துள்ளது. காளையனூர் கூட்டுச் சுரங்கத்தில் உள்ள 26 சுரங்கங்கள் ஒட்டு மொத்தமாக அளவீடு செய்யப்படவில்லை. தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள ஏனைய பகுதிகளைக் காட்டிலும் எளிதில் சென்றுவரக்கூடிய இடத்தில் அவை அமைந்திருப்பினும், அறிக்கையில் அவை விடுபட்டிருப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
பெரியதடாகம் கூட்டுச் சுரங்கத்தில் அளவீடு செய்யப்பட்ட 9 சுரங்கங்களின் செம்மண் கொள்ளளவு 1,64,987 கன மீட்டர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. சுரங்கங்களின் பரப்பளவையும், ஆழத்தையும் அது வெளியிடவில்லை. என்றாலும்கூட, சுரங்கங்களின் புல எண்களை அது அளித்துள்ளது. கூகுள் எர்த் மென்பொருளின்மூலம் கிடைக்கும் செயற்கைக்கோள் படிமங்களில் இந்தப் புல எண்களைப் பொருத்திப் பார்க்கும்போது, கூட்டுக்குழுவின் அளவீடு பிழையானது என்பதை அறிந்து கொள்கிறோம்.
எனது புத்தகத்தில், இந்த 9 புல எண்களில் (புல எண் 622 ஐ சேர்த்து) உள்ள சுரங்கங்களின் பரப்பளவை கூகுள் எர்த் படிமங்களின் அடிப்படையில் கணக்கிட்டுள்ளேன். புல எண் 613/1 இல் 52,713 கன மீட்டர் அளவிற்கு (13,700 சதுர மீட்டர் பரப்பளவில், 3.85 மீட்டர் ஆழத்தில்) மண் எடுத்திருப்பதாகக் கூட்டுக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. ஆனாலும், கூகுள் எர்த் படிமத்தின் அடிப்படையில் அங்கு 2021 மார்ச் மாதம் வரை மண் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
எனது கணக்கின்படி, இங்கு 1,54,067 சதுர மீட்டர் பரப்பளவில் சராசரியாக 4 மீட்டர் ஆழத்தில் 5,84,460 கன அடி மண் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, கூட்டுக்குழுவின் அளவீட்டைக் காட்டிலும் 34,633 சதுர மீட்டர் குறைவான நிலத்தில் 4,19,473 கன மீட்டர் கூடுதல் அளவிலான மண் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இந்த மண்ணிற்கான சூழலியல் இழப்பீட்டு மதிப்பை கூட்டுக் குழுவின் சூத்திரத்தை கொண்டு கணக்கிடும்போது அதன் மதிப்பு ரூ.13.97 கோடி கூடுதலாக இருக்கிறது(2). புல எண் 613/1 இற்கான கூட்டுக்குழுவின் இழப்பீட்டுத் தொகையான ரூ.1,75,50,667 ஐ இதில் இருந்து எடுத்துவிட்டால் ரூ. 12.21 கோடி மதிப்பை இந்த 9 புல எண்களில் கூட்டுக்குழு குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெரியதடாகம் கூட்டுச் சுரங்கப் பகுதியில் மேற்கூறிய 9 சுரங்கங்களைத் தவிர கூடுதலாக 12 சுரங்கங்கள் உள்ளன. எளிதில் சென்றுவரக்கூடிய இடத்தில் அவை அமைந்திருப்பினும் அவற்றைக் கூட்டுக் குழுவினர் அளவீடு செய்யவில்லை(3). மேலும், காளையனூர் கூட்டுச் சுரங்கத்தில் உள்ள 26 சுரங்கங்களையும் கூட்டுக்குழுவினர் அளவீடு செய்யவில்லை.
பெரியதடாகம் கூட்டுச் சுரங்கத்தில் கூட்டுக் குழுவினரால் அளவீடு செய்யப்படாமல் விடப்பட்டிருக்கும் 12 சுரங்கங்களின் மொத்தப் பரப்பளளவு 72,454 சதுர மீட்டராகும்(4). இந்த சுரங்கங்களில் இருந்து 2,81,299 கனமீட்டர் அளவிற்கு மண் எடுக்கப்பட்டுள்ளது(5). இதன் நிகர தற்கால மதிப்பு (NPV) ரூ.9.37 கோடி(6) ஆகும். எனவே பெரிய தடாகம் கூட்டுச் சுரங்கத்திற்கு சுமார் 21.58 கோடி ரூபாய்க்கான அபராதத்தைக் கூட்டுக்குழு விதிக்கத் தவறியுள்ளது.
காளையனூர் கூட்டுச்சுரங்கத்தில் உள்ள 26 சுரங்கங்களில் அள்ளப்பட்ட மண்ணிற்கான மொத்த அளவீடு 28,03,990 கன அடியாகும். அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.93.36 கோடி ஆகும். ஆக பெரியதடாகம் மற்றும் காளையனூர் பகுதியில் உள்ள கூட்டுச் சுரங்கங்களில் மட்டுமே ரூ.114.94 கோடி ரூபாய்க்கான அபராதத்தை கூட்டுக்குழு விதிக்கத் தவறியிருக்கிறது..
என்னால் ஆய்வு செய்யப்பட்ட 47 செம்மண் சுரங்கங்கள் பள்ளத்தாக்கில் மிகவும் எளிதில் சென்றுவரக்கூடிய பகுதியில்தான் அமைந்துள்ளன. என்றாலும்கூட, அவற்றை ஆட்சியர் தலைமையிலான கூட்டுக்குழு ஏன் அளவீடு செய்யவில்லை?
சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிதைக்கப்பட்டுள்ள தடாகம் பள்ளத்தாக்கின் சூழலியல் பாதிப்புக்கான மதிப்பீட்டை முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அளவீடு மேற்கொண்டது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டுக்குழுவே என்ற அடிப்படையில் அதன் பணிகளை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். இதனை சாத்தியமாக்கிய மாண்பமை நீதி மன்றங்களை நாம் நெஞ்சாற நன்றி கூற வேண்டும்.
என்றாலும் கூட, இந்த அறிக்கை பிழைகள் மலிந்த அறிக்கையாக உள்ளது. இதனை இடைக்கால அறிக்கையாகக் கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 25 ஆண்டுகளாக எவ்வித தண்டணைக்கும் ஆட்படாத சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளின் முதலாளிகள் கூட்டுக்கமிட்டியின் இடைக்கால இழப்பீட்டுத் தொகையை எவ்வித சலனமும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள். பள்ளத்தாக்கில் இருந்து அவர்கள் அடைந்த பயனில் 1 விழுக்காடாகக் கூட இது இல்லை என்பதால் அவர்களது இன்றைய, நாளைய சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை நிறுத்ததடுத்து நிறுத்தும் காரணியாக (Deterent Factor - DF) இந்த இழப்பீட்டுத் தொகையால் இருக்க முடியாது.
மாவட்ட நிர்வாகமானது இவர்களின் மீது கடந்த கால் நூற்றாண்டாக சட்ட ரீதியான நடவடிக்கைககளை எடுக்காத காரணத்தால் சட்டத்திற்குப் புறம்பான தங்கள் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களது மனதில் வேரூண்றி விட்டிருக்கிறது. அரசின் மூலம் தமது செயல்பாடுகளுக்கு வரும் அனைத்து இடர்களையும் சட்டத்திற்கு அப்பாற்பட்டுத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாகவே, 19.03.2021 அன்று பள்ளத்தாக்கில் உள்ள அவர்களது தொழிற்சாலைகள் மாவட்ட நிர்வாகத்தால் மூடி முத்திரயிடப்பட்ட பிறகு, தமக்கு அடுத்துள்ள கோவனூர், தோலாம்பாளையம், போளுவாம்பட்டி பள்ளத்தாக்குகளில் தம் தொழிற்சலைகளை சட்ட ரீதியாக அனுமதி ஏதும் பெறாமலேயே தொடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்விடங்களின் சூழல்கள் அழிவுக்குள்ளாகத் தொடங்கியுள்ளன. இந்த செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. புதிய இடத்தில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் பள்ளத்தாக்கில் மாவட்ட நிர்வாகத்தால் மூடி முத்திரையிடப்பட்ட தம் தொழிற்சாலை வளாகங்களில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். மாண்பமை சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், பசுமைத் தீர்ப்பயத்திற்கும் மாவட்ட அதிகாரிகளும், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரும் “இந்தத் தொழிற்சாலைகளில் உள்ள அனைத்தையும் கையகப்படுத்துவோம், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று அளித்த வாக்குறுதிகளை இம்மியளவும் கடந்த 17 மாதங்களாக நிறைவேற்றவில்லை என்பதாலும், அரசால் மூடி முத்திரையிடப்பட்ட வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிற்சாலை முதலாளிகளை மாவட்ட நிர்வாகம் கட்டுபடுத்தவில்லை என்பதாலும் சட்டத்தை மதியாத முதலாளிகளின் மனோநிலை ஆல் போல் வளர்ந்து நிற்கிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டுக்குழுவின் அறிக்கையில் உள்ள பிழைகள் முதலாளிகளின் இந்த மனோநிலைக்கு மேலும் உறுதி சேர்ப்பதாக அமையும்.
எனவே, இப்போதாவது சட்டத்தின் ஆட்சியை இவர்களிடம் நிலைநாட்டிட வேண்டும். அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.
.............
1. 5550 X 185 X 6180 = ரூ.634.53 கோடி
2. 419473 X 100 = 41947300 D (Market Value of illegally mined mud)
419473 X 100 = 41947300 RF (Risk Factor X D) : Here RF is 1 since this area is a notified Eco Sensitive Area
Present Value of Foregone Ecological Values PV = DXRF/(1+0.05)1 +DXRF/(1+0.05)2 +DXRF/(1+0.05)3
+DXRF/(1+0.05)4
+DXRF/(1+0.05)5
= 41947300/ (1.05)1 + 41947300/(1.05)2 + 41947300/(1.05)3 + 41947300/(1.05)4 + 41947300/(1.05)5
PV= 3,99,49,809.52 + 3,80,47,437.64 +36235654.90 + 34510147.52 + 32866807.16 = 317,76,18,536.73 = 18,16,09,856.747
NPV = PV-D = 18,16,09,856.747- 41947300 = 13,96,62,556.747
3. கூட்டுக்குழுவால் அளவீடு செய்யப்படாத நிலங்களின் புல எண்கள்: (இவை அனைத்தும் வீரபாண்டி வருவாய் கிராமத்தை சார்ந்தவை): 578,595,609, 610, 625, 627, 628, 636, 642, 646, 647,656
4. பெரியதடாகம் கூட்டுச் சுரங்கத்தின் மொத்தப் பரப்பளவு = 261154 சதுர மீட்டர். கூட்டுக்குழுவால் அளவீடு செய்யப்பட்ட சுரங்கங்களின் பரப்பளவு = 1,88,700 சதுர மீட்டர். அளவீடு செய்யப்படாத சுரங்கங்களின் பரப்பளவு = 72,454 சதுர மீட்டர்.
5. 21 சுரங்கங்கங்களின் மொத்தக் கொள்ளளவு = 8,65,759 கன மீட்டர். 9 சுரங்கங்களின் மொத்தக் கொள்ளளவு = 5,84,460 கன மீட்டர். மீதமுள்ள 12 சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணின் கொள்ளளவு = 865759-584460 = 281299 கன மீட்டர்.
6. 281299 X 332.95 [அதாவது ஒரு கன மீட்டர் மண்ணுக்கான “தற்கால நிகர மதிப்பு” (Net Present Value - NPV) ரூ.332.95 என்ற அடிப்படையில் ]
Comments
Post a Comment