சாந்து
29.07.2022
நீரோடைகளின் வெள்ளத்திற்கும், மஞ்சள் சோளத்திற்கும், வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும் காலம் காலமாக அழியாப் புகழைப் பெற்றிருந்த தடாகம் பள்ளத்தாக்கு, இன்று சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளால் சூரையாடப்பட்டு, முற்றும் முழுதுமாக சீரழிக்கப் பட்டிருக்கிறது.
கோவை மாநகரத்தை வரலாற்று ரீதியாக உலுக்கிய இயற்கைப் பேரிடர் நிகழ்வுகள் இரண்டு. 1900 அம் ஆண்டு, பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாலை மணி 3:11-க்கு கோவை மாநகரைத் தாக்கிய 6 ரிக்டர் சக்தி கொண்ட பூகம்பமும், 1710 ஆம் ஆண்டு தடாகம் பள்ளத்தாக்கில் இருந்து வரும் சங்கனூர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குமே அவை.
கோவை மாநகரை வட கிழக்கு-தென்மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கும் சங்கனூர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் தாழ்வான கரையில் அமைந்திருந்த கிருஷ்ணராயபுரம் என்ற கிராமம் (கோவை மாநகரத்தின் இன்றைய நவ இந்தியா பகுதி) அடியோடு அழிந்து போனது. அதில் வாழ்ந்திருந்த மக்கள் அங்கிருந்து குடி பெயர்ந்து 1711 ஆம் ஆண்டில் உருவாக்கிய மேட்டுப்பகுதி கிராமங்களே இனறைய பீளமேடு (பூளைமேடு), ஆவாரம்பாளையம் மற்றும் உடையாம் பாளையம் ஆகும்.
சங்கனூர் ஓடையின் வெள்ள நீரைப் பயன்படுத்தி கோவையின் வறண்ட பகுதிகளை செழிப்பாக்குவதற்கான முயற்சிகள் பல 1950 களில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன என்றாலும் கூட, 1980 களின் முற்பகுதியில்தான் அது சாத்தியமாகியது. நகருக்கு வடக்கில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி பகுதியின் வேளாண்குடிகள் இந்த வெள்ள நீரைக் கொண்டு நீர் நிலை ஒன்றினை உருவாக்கி, தங்கள் பகுதியின் நிரந்தர வறட்சியைப் போக்க முன்வந்தனர். இதற்காக 200 ஏக்கர் நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர். சங்கனூர் ஓடையின் கணுவாய் தடுப்பணையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் ஒன்று வெட்டப்பட்டு சின்னவேடம்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் கோவை மாந்கரம் வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பற்றப்பட்டது மட்டுமல்லாமல், வறண்டு கிடந்த கோவை வடக்குப் பகுதியில் வேளாண் தொழிலும் சிறப்புறத் தொடங்கியது.
ஆனால், 2000 ஆம் ஆண்டிலிருந்தே சின்ன வேடம்பட்டி ஏரிக்கான நீர் வரத்து குறையத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டிலிருந்து அது முழுமையாகவே நின்று போனது. வறண்டு நிற்கும் தங்கள் ஏரிக்கு நீரை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அப்பகுதி மக்கள் 2019 ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக முயன்று வருகிறார்கள். என்றாலும் கூட அவர்களது முயற்சிகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் இன்றுவரை இல்லை.
………….
தடாகம் பள்ளத்தாக்கில் 1800 ஆம் ஆண்டுவரை பெரிய தடாகம் மற்றும் மருதங்கரை ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே இருந்தன. இந்த கிராமங்களில் வாழ்ந்து வந்த பூலுவக் கவுண்டர் மற்றும் இருளர் இன மக்கள் பள்ளத்தாக்கின் நீரோடைகளை நேரடியாக உபயோகிக்கவில்லை. மலை அடிவாரத்தில் இருந்த கணக்கிலடங்கா சுனைகளையே அவர்கள் நாடியிருந்தனர். மழையை மட்டுமே நம்பியிருந்த வேளாண் பணிகளிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். வேனிற்காலங்களில் மலை அடிவாரத்தில் உள்ள சுனைகளும், மலையில் உள்ள துறைகளும் வற்றிப் போவதால் வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்ப்பதற்காகப் பெரிய தடாகம் கிராமத்தின் தலைவியாக இருந்த பொன்னி எனும் பெண்மணி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட தியாகங்களை இன்றும் அந்த மக்கள் கதைப்பாடல்களாகப் பாடி வருகின்றனர்.
திப்புவை வீழ்த்திவிட்டு கிழக்கிந்தியக் கம்பெனி அரசுக் கட்டிலில் ஏறியிருந்த நாட்கள் அவை. 1800-களின் முதல் பத்தாண்டுகளில் கோவை மக்களின் மீது கடுமையான வரியை கம்பெனி விதித்தது. வரியைக் கட்ட இயலாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வரியைக் கட்டுவதற்குப் பதிலாக, வேனிலில் வறண்டுபோகும் சுனைகளையும், துறைகளையும் வறளாமல் வைத்திருக்கும் ஏரி ஒன்றினை தோண்ட பொன்னி முடிவு செய்தார். பெரியதடாகம் கிராமத்திற்கு நேர் வடக்கில் 16 ஏக்கர் பரப்பளவில் ஏரி தோண்டப்பட்டது. வரி வசூலிக்க கம்பெனி அலுவலர்கள் வந்தபோது அவரும், அவரது கணவரும் தலைமறைவாகியிருந்தனர். கிராம மக்களை எவ்வளவு துன்புறுத்தியும் அவர்கள் பொன்னியைக் காட்டிக் கொடுக்கவில்லை. தலைமறைவாகிப் போனவர்களைக் கண்டுபிடிக்க இயலாமல் கம்பெனியினர் பல ஆண்டுகளாகத் திணறித்தான் போயினர்.
இறுதியில், பொன்னியால் வெட்டப் பட்ட ஏரியைத் தங்களுக்குக் கிடைத்த பரிசாக நினைத்துக் கொண்டனர். மனிதர்கள் அதிகம் இல்லாத இந்த நிலப் பகுதியில், பிற பகுதி மக்களை குடியமர்த்தி வேளாண் பணிகளை விரிவைடைய செய்து கூடுதல் வரியை வசூலித்துக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்து தம் மனதைத் தேற்றிக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்த ஒக்கிலியக் கவுடர், அனுப்பக் கவுண்டர், பௌத்தக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், முத்துராஜா மற்றும் அருந்ததியர் இன மக்கள் 1800 -இன் முதல் பாதியில் பள்ளத்தாக்கில் குடியேறத் தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து வன்னியர், நாயக்கர் இன மக்களும் குடியேறி புதிய கிராமங்களை உருவாக்கினர்.
ஏரியை அடுத்து சின்னத்தடாகம் கிராமம் உருவாகியிருந்தது. புதிதாகக் குடியேறிய மக்கள் பொன்னி அம்மனை மறந்து விடவில்லை. ஏரியைப் பொன்னி ஏரி என்றே அழைத்து அதனை செவ்வனே பராமரித்துப் பாதுகாத்தனர். பள்ளத் தாக்கிற்குள் புதிதாகக் குடியேறிய மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், மலை அடிவார சுனைகளுக்கான நிலத்தடி நீரை உயர்த்தும் நீராதாரமாகவும் பொன்னி ஏரி திகழத் தொடங்கியது.
வரியைக் கட்டாமல் ஏரியைத் தோண்டி தங்களை ஏமாற்றி விட்டுச் சென்ற பொன்னியையும், அவரது கணவரையும் தேடுவதை கம்பெனியினர் கைவிடவில்லை. கோவை மாவட்ட ஆட்சியராக ஜான் சல்லிவான் பொறுப்பேற்ற தொடக்க காலகட்டத்தில், தடாகம் மலைகளில்தான் பொன்னியும், அவரது கணவரும் அவர்களது குதிரையும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதாக கவுண்டம்பாளையம் வண்ணார் ஒருவர் மூலம் கம்பெனி அறிந்து கொண்டது. காட்டிக்கொடுத்த வண்ணாருக்கு அரசு வேலை கொடுத்து கௌரவித்தது.
இன்றைய லேம்ப்டன் சிகரத்தின் (Lambton’s Peak) அருகில் பொன்னியும், அவரது கணவரும், அவர்களது ஆருயிர்க் குதிரையும் தங்கி இருந்த போது, வண்ணார் அளித்த தகவலின் அடிப்படையில், கம்பெனி சிப்பாய்களால் சுற்றி வளைக்கப் பட்டனர். அவர்தம் கைகளில் சிக்கித் தம் சுதந்திரத்தை இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தனர். குதிரையின் கண்களைத் துணியால் கட்டிய பிறகு, அதில் ஏறி மலைச் சிகரத்தில் இருந்து குதித்தனர். இன்னுயிர் நீத்து அழியாப் புகழுக்கு ஆளாயினர். அவர்களின் உடல் விழுந்த இடம் இன்றும் உள்ளூர் மக்களால் நினைவு கூறப்படுகிறது. பொன்னி ஊத்து (பொன்னூத்து) என்ற வற்றாத சுனை உள்ள இடமே அது. கொலையை நிகழ்த்திய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை விட்டு வெளியேறி 265 ஆண்டுகள் உருண்டோடி அனைவராலும் மறந்துபோன ஒன்றாகிப் போனது. என்றாலும் கூட, கொல்லப்பட்ட பொன்னி, சுனையாக உருவெடுத்து அம்மலையில் அழிவின்றி வீற்றிருக்கின்றார்.
பள்ளத்தாக்கில் புதிதாகக் குடியேறிய மக்களும், பள்ளத்தாக்கின் பூர்வ குடி மக்களைப் போலவே மழையை மட்டுமே நம்பியிருந்த புன்செய் வேளாண்மையையே மேற்கொண்டனர். பொன்னி ஆத்தாள் விட்டுச் சென்ற வழிகாட்டுதலையே பின்பற்றி நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு குட்டைகளை அவர்கள் தோண்டினர். இதன் மூலம் மலையோரச் சுனைகளை வற்றாமல் பார்த்துக் கொண்டனர். மேலும் அவை அவர்களது கால்நடைகளுக்கும், வன விலங்குகளுக்குமான குடி நீர் ஆதாரமாக செயல்பட்டன.
பள்ளத்தாக்கினூடாகச் செல்லும் கட்டாறுகளை நேரடியாக உபயோகிக்காமலேயே அம்மக்கள் மஞ்சள் சோளம், அவரை, துவரை, வேர்க்கடலை, தர்ப்பூசணி போன்ற பயிர்களை விளைவித்தனர். அடுத்துவந்த நூறு ஆண்டுகளில் தடாகம் பள்ளத்தாக்கு அதன் மஞ்சள் சோளத்திற்காகப் பெரும் புகழைப் பெற்றது.
1960-களில் தமிழ்நாடு அரசு பள்ளத்தாக்கில் கிணறுகளைத் தோண்ட ஊக்கம் அளித்தது. நிலத்தடி நீரை உபயோகித்து கரும்பும், நெல்லும், வாழையும் அதன் பிறகு பயிரிடப்பட்டாலும் கூட, பள்ளத்தாக்கின் பெரும்பகுதி மானாவாரி நிலமாகவே தொடர்ந்தது. நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக, 1970-களில் பள்ளத்தாக்கின் நீரோடைகளில் தடுப்பு அணைகள் அரசால் கட்டப்பட்டன. இந்த நீரோடைகளின் வெள்ளப் பெருக்கை நம்பி 1983 ஆம் ஆண்டு சின்ன வேடம்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.
1970 வரை தொழிற்சாலை நகரமாக இருந்த கோவை 1980-களில் கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் தொழில்களுக்கான நகரமாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த மாற்றத்தால், நகரத்தில் கட்டுமானத் தொழிலகள் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தன.
கவுண்டம்பாளையத்தில் கட்டுமானத் தொழிலை மேற்கொண்டிருந்த சிலர் (பிற்காலத்தில் கோனார் இனத்தவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சல்லிவான் கலெக்டரின் ஊழியரான வண்ணார் அவர்களின் பேரப்பிள்ளைகள்தான் இவர்கள் என்று சொல்லப்படுகிறது) தடாகம் பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் செல்லும் ஆனைக்கட்டி சாலையின் ஓரமாக இருந்த நிலங்களை 1980-களின் இறுதியில் வேளாண் மக்களிடமிருந்து விலைக்கு வாங்கத் தொடங்கினர். இந்த நிலங்களில் நகரத்திலுள்ள தங்கள் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான செங்கல்களை உற்பத்தி செய்யும் சூளைகளை நிறுவினர்.
பணம் மற்றும் அதிகாரம் என்பதை மட்டுமே தம் இலக்காக் கொண்டு செயல்பட்ட இவர்களைப் பின்பற்றி உள்ளூர் நபர்கள் சிலரும் 1990-களின் தொடக்க ஆண்டுகளில் சூளைகளைத் தொடங்கினர். புதிதாக சூளைகளைத் தொடங்கிய நபர்களின் செல்வச் செழிப்பைக் கண்டதும், மேலும் பலருக்கு பேராசை தொற்ற, அவர்களும் பொன்னியம்மனைக் காட்டிக் கொடுத்த வண்ணாரின் குழந்தைகளைப் போலவே, வேளாண் நிலங்களில் சட்டத்திற்குப் புறம்பாக சூளைகளை நிறுவினர்.
நூற்றாண்டுகளாக காட்டாறுகளின் அன்பில் நனைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கின் நில அமைதி இம்மனிதர்களின் பேராசைத் தீயால் சுட்டெரிக்கப்பட்டு, சூளைகளின் புகையோடு புகையாக தூசியாய் காற்றில் கரையத் தொடங்கியது.
…………..
Comments
Post a Comment