தடாகம் பள்ளத்தாக்கினையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுற்றுச் சூழல் உணர் திறன் பகுதியாக (Ecologically Sensitive Area - ESA) உடனடியாக அறிவிக்க வேண்டும். ஏன்?
சாந்தலா
30/06/2022
தடாகம் பள்ளத்தாக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும். கோயம்புத்தூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக் காடானது, இந்தப் பள்ளத் தாக்கினை வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் குதிரை லாடம் போல சூழ்ந்துள்ளது. இந்தக் காப்புக் காடுகளில் இருந்தும், இந்தப் பள்ளத்தாக்கில் இருந்தும் நொய்யல் நதியின் முக்கியமான கிளை நதியான சங்கனூர் பள்ளம் உருவெடுக்கிறது. பிரம்மகிரி-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சிமலை யானைகள் நிலப்பரப்பின் ( Brahmagiri-Nilgiri-Eastern Ghat Elephant Landscape ) ஒரு பகுதியான கோயம்புத்தூர் யானைகள் காப்பகத்தின் ( Coimbatore Elephant Reserve) ஒரு அங்கமாக இந்தப் பள்ளத்தாக்கு திகழ்கிறது. 24-வீரபாண்டி, 23-சின்னத் தடாகம், 22-நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய நான்கு வருவாய் கிராமங்களைக் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கு, கோயம்புத்தூர் வடக்குத் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பள்ளத்தாக்குகளில் உள்ள வருவாய் கிராமங்கள்:
கிராமம் |
பரப்பளவு (ஹெக்டேரில்) |
பகுதியின் சூழலியல் வரையரை |
24 வீரபாண்டி |
4906.25 |
HACA - ESA |
23 சின்னத்தடாகம் |
1031.00 |
HACA |
22 நஞ்சுண்டாபுரம் |
1198.92 |
HACA |
பன்னிமடை |
748.86 |
- |
சோமையம்பாளையம் |
1311.00 |
HACA |
நாயக்கன்பாளையம்-கோவனூர் |
982.89 |
HACA |
மொத்தம் |
10178.92 |
|
ஆதாரம்: District Census Handbook Coimbatore pp.28, 220 - Census of India 2011 |
இந்திய வான்வெளி நிறுவனத்தின் வலைத்தளமான Bhuvan, தடாகம் பள்ளத்தாக்கினை மண் அரிப்புக்கு உள்ளாகும் பகுதி என்று வரையறை செய்துள்ளது (4).
தமிழ்நாடு அரசு இந்தப் பகுதிகளை சூழலியல் ரீதியில் எளிதில் சிதைந்துபோகக்கூடிய பகுதிகளாகக் (ecologically fragile) 1990 ஆம் ஆண்டில் வரையறை செய்தது. இதன் காரணமாக அந்த ஆண்டிலேயே (பன்னிமடை கிராமம் நீங்கலாக) இந்த கிராமங்கள் மலை தள பாதுகாப்பு ஆணையத்திற்கு (Hill Area Conservation Authority - HACA) உட்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டன (5). மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகளைக் (ecologically sensitive areas) கண்டறிவதற்காக, 2012 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவானது 2013 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் உள்ள தடாகம் காப்புக் காட்டையும், 24-வீரபாண்டி வருவாய் கிராமத்தையும் சுற்றுச் சூழல் உணர்திறன் பகுதிகள் (Ecologically Sensitive Area) என்று வரையறை செய்தது (6). இந்த வரையறையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகமானது 2018 ஆம் ஆண்டில் இவ்விரண்டு பகுதிகளையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் என்று அரசாணை பிறப்பித்தது (7).
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பள்ளத்தாக்கில் 1995 ஆம் ஆண்டிலிருந்து செங்கல் சூளைகளும், அவற்றிற்கான செம்மண் சுரங்கங்களும் அரசு அனுமதி ஏதுமின்றி சட்டத்திற்குப் புறம்பாக செயல்படத் தொடங்கின. 2006 ஆம் ஆண்டிலிருந்து இவை இயந்திரமயமாக்கப் பட்டன. தடாகம் காப்புக்காட்டின் மலை அடிவாரத்திலும், நீரோடைகளின் கரைகளிலும் ராட்சத செம்மண் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இந்த சுரங்கங்களை அடைய சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் நீரோடைகளே மண்ணை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கான சாலைகளாக மாற்றப்பட்டன.
செங்கல் உற்பத்திக்குத் தேவையான நிலத்தடி நீர் ராட்சத எந்திரங்கள் கொண்டு இறைக்கப்பட்டன. பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இந்த நீரை சேமித்து வைக்கும் ராட்சதத் தண்ணீர் தொட்டிகளும், பச்சைக் கல்லைத் தயார் செய்து உலர வைப்பதற்கு பல லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கூடாரங்களும் நிறுவப் பட்டன (8). பச்சை செங்கல்லை வேக வைக்க பனை மரக் கட்டைகளும், சீமைக் கருவேல் மரக்கட்டைகளும், நைந்துபோன ரப்பர் டயர்களும், முந்திரிப் பொட்டும் (ஓடும்) பல லட்சம் டன் அளவில் இறக்குமதி செய்யப்பட்டன. செம்மண்ணோடு கலப்பதற்காக கோவை நகரில் உள்ள உலோக வார்ப்பாலைகளில் (foundry) இருந்து கழிவாக வெளியேற்றப்படும் வார்ப்பாலைக் கழிவு மணலும் (waste foundry sand) பெரிதளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
பள்ளத்தாக்கினை சுற்றியுள்ள மலைகளின் வாட்டம் (slope) செங்குத்தாக உள்ளது. பள்ளத்தாக்கு நிலப்பரப்பின் வாட்டம் அதன் மையப் பகுதியை நோக்கிக் குவிந்ததாக உள்ளது. இந்தக் காரணத்தால் மலைகளின் அடிவாரத்தில் இடம்பெயறும் யானைகள், அடிவாரப்பகுதியைத் தவிர, வடக்கு தெற்காக ஓடும் நீரோடைகளை வடக்கு மற்றும் தெற்கு மலையை இணைக்கும் வழித்தடங்களாக உபயோகித்துக் கொள்கின்றன (9).
தடாகம் காப்புக் காட்டிலும், மலை அடிவாரத்திலும் ஆண்டு முழுதும் தண்ணீரை அளிக்கும் பல நீர்ச் சுனைகள் உள்ளன (10). தடாகம் காப்புக் காட்டிற்குள் பல்வேறு நீர்நிலைகளும் உள்ளன (11). இவை யாவும் வன விலங்குகளுக்கான நீர் ஆதாரமாகக் காலங்காலமாக விளங்கி வந்தன. கடந்த 25 ஆண்டுகளின்போது செங்கல் தொழிற்சாலைகளுக்காக மிகப்பெரிய அளவில் நிலத்தடி நீர் ராட்சத இயந்திரங்களின் மூலம் உறிஞ்சியபோது மேற்கூறிய சுனைகளும், நீர் நிலைகளும் வற்றிப்போயின. பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் பச்சைக்கல் உற்பத்திக்காக கட்டப்பட்டிருந்த ராட்சத நீர்த் தொட்டிகளை நோக்கி வனவிலங்குகள் படையெடுக்கத் தொடங்கின. செங்கல் தொழிற்சாலைகளில் செங்கல்லை வேக வைக்க உபயோகப்படுத்தப்பட்ட பனைமரங்களின் இனிப்புத் தன்மை கொண்ட மையப்பகுதியை உண்பதற்காகவும் யானைகள் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்குள் வரத் தொடங்கின. மலை ஓரங்களில் செம்மண் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட ராட்சதக் குழிகளால் யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் சிதைக்கப்பட்டபோது, மேலதிகமாக வடக்கு மலையில் இருந்து தெற்கு மலைக்கு செல்ல நீரோடைகளைத் தம் வழித்தடமாக யானைகள் உபயோகிக்கத் தொடங்கின. இதே நீரோடைகளையே செம்மண் சுரங்கங்களில் இருந்து மண்ணை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகள் தம் சாலைகளாக உபயோகித்து வந்ததால், யானைகளுக்கும் இந்த இயந்திரங்களுக்கும் இடையிலான மோதல்கள் பெருகின. இவ்வியந்திரங்களினால் விரட்டப்பட்ட யானைகள் சுற்றியுள்ள தோட்டங்களில் புகுந்தன. தோட்டங்களை அவை சேதப்படுத்திய அதே நேரம், தோட்டங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன. இவ்வாறு செங்கல் தொழிற்சாலையின் செயல்பாட்டால் வன விலங்குகளின் வாழ்வு, அதிலும் குறிப்பாக யானைகளின் வாழ்வு சீரழிவுக்கு உள்ளாகியது. பள்ளத்தாக்கில் மனித - விலங்கு மோதல் இவ்வாறு மிகவும் மோசமான நிலையை அடைந்தது (12).
மலை அடிவாரத்திலும், நீரோடைகளின் கரைகளிலும், தரைகளிலும் செம்மண்ணுக்காகத் தோண்டப்பட்ட ராட்சதக் குழிகளால் நீரோடைகளின் நீர் ஒழுக்கு பாதிக்கப்பட்டது. நீரோடைகளில் வழிந்து செல்லவேண்டிய நீர், அடுத்துள்ள ராட்சதக் குழிகளை நிரப்பின. நீரோடைகளின் தரைகளிலேயே குழிகள் தோண்டப்பட்டதால் அவை நிரம்பிய பின்னரே கீழுள்ள பகுதிக்கு நீர் ஒழுகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணம், 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு சங்கனூர் பள்ளத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கின் முகவாயில் உள்ள கணுவாய் தடுப்பணையை வெள்ள நீரால் அடைய இயலவில்லை. இந்தத் தடுப்பணையில் இருந்து சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர் ஒழுக்கு இல்லாமல் போனது. இந்த ஏரியை 1980 களின் பிற்பகுதியில் இருந்து நம்பிக்கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தின் வட பகுதியைச் சார்ந்த வேளாண் பெருமக்கள் பாதிக்கப்பட்டனர். அதுபோலவே, சிங்காநல்லூர் ஏரிக்கான நீர் ஆதாரம் சங்கனூர் பள்ளம்தான் என்பதால் கோவை நகரின் நிலத்தடி நீர் ஆதாரமும் கேள்விக்குள்ளானது (13).
தடாகம் பள்ளத்தாக்கில் இருந்து உருவாகி நொய்யல் நதியில் சேரும் சங்கனூர் பள்த்தித்திற்குளத்திற்குளம் 6 நுண் நீர்ப் பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இது ஒன்றிய அரசின் Soil and Land Use Survey of India நிறுவனத்தின் வரையறை ஆகும். இந்த 6 நுண் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் ஐந்து பகுதிகள் தடாகம் பள்ளத்தாக்கிற்குள் அமைந்துள்ளன. அவை யாவும் சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளால் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன.
இந்த பிரச்சினைகளை எதிர்த்து உள்ளூர் மக்கள் 2007 ஆம் ஆண்டிலிருந்தே மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளிடம் முறையிடத் தொடங்கினர். 2019 ஆம் ஆன்ண்டு செப்டம்பர் மாதம் சின்னத்தடாகத்தை சேர்ந்த T.M.S.ராஜேந்திரன் என்பவரும், சென்னையைச் சேர்ந்த முரளீதரன் என்பவரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வரும் இந்த செங்கல் தொழிற்சாலைகளை மூடி முத்திரையிடக் கோரியும், யானை வழித்தடத்தினை காப்பாற்றிடவும் வழக்கு தொடுத்தனர் (20). அடுத்த மாத இறுதியிலேயே, உரிமம் இன்றி செயல்படும் சூளைகள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பினை அனைத்து செங்கல் சூளை முதலாளிகளுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார் (21). இதற்குப் பின்னரும் சூளைகளின் இயக்கம் நிற்கவில்லை. 06.01.2021 அன்று இந்தப் பிரச்சினை குறித்த முக்கிய ஆணை ஒன்றை சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்தது. யானைகளுடனான மோதலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், அவற்றிற்கான வழித்தடத்திற்கான உரிமையை எவ்வாறு மீட்டளிப்பது என்பது குறித்தும், சட்டத்திற்குப் புறம்பான செங்கல் சூளைகளுக்கு எதிரான உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்பது குறித்தும் அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பதே அந்த ஆணை. தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் இது குறித்த நிலை அறிக்கையை அடுத்த 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10.02.2021 அன்று உயர் நீதி மன்றம் ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து 19.03.2021 ஆம் தேதியன்று பள்ளத்தாக்கில் இயங்கி வந்த 183 செங்கல் தொழிற்சாலைகள் மாவட்ட நிர்வாகத்தால் மூடி முத்திரையிடப்பட்டன; அவற்றிற்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. 14.04.2021 அன்று தடாகம் பள்ளத்தாக்கின் பிரச்சினையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது (22). சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளின் செம்மண் சுரங்கங்களால் நிலத்தடி நீருக்கும், நீரோடைகளுக்கும், வேளாண்மைக்கும் எப்பேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அது அமைத்தது.
சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோவை மாவட்ட ஆட்சியரின் 29.10.2019 தேதியிட்ட அறிவிப்பு ஆணையை 19.03.2021 ஆம் தேதிவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த இடைப்பட்ட 16 மாதங்களின்போது சட்டத்திற்குப் புறம்பான தங்களின் செங்கல் நிறுவனங்கள் அரசால் முடக்கப்படலாம் என்று அச்சப்பட்ட முதலாளிகள் மேலதிகமான செங்கல் தயாரிப்பில் கண்மூடித்தனமாக இரவு பகல் பாராது ஈடுபட்டார்கள். இந்த காலகட்டத்தின்போதுதான் கோவை வனச் சரகத்தில் மேலதிகமான மனித யானை மோதல் நிகழ்வுகள் தடாகம் பள்ளத்தாக்கில் நடந்தேறின. மே 2020 இல் இருந்து டிசம்பர் 2020 வரை உள்ள 8 மாதங்களில் 8 பேர் மனித யானை மோதலினால் தடாகம் பள்ளத்தாக்கில் உயிரிழந்தனர் (23). ஆனால் அதே சமயம், 19.03.2021 ஆம் தேதியன்று செங்கல் தொழிற்சாலைகள் மூடி முத்திரையிடப்பட்ட பிறகு இன்று வரை (03.06.2022) ஒருவர் கூட மனித யானை மோதலின் காரணம் தடாகம் பள்ளத்தாக்கில் இறக்கவில்லை. அதுபோல, கடந்த 14 மாதங்களில் பள்ளத்தாக்கின் நிலத்தடி நீரை செங்கல் தொழிற்சாலைகள் உறிஞ்சவில்லை என்பதால் மலையடிவாரத்தில் உள்ள சுனைகளும், தடாகம் காப்புக் காட்டில் உள்ள நீர்நிலைகளும் (துறைகளும்) வறண்டுபோகாமல் உள்ளன; இதனால் தண்ணீரைத் தேடி கிராமங்களுக்குள் வனவிலங்குகள் வருவது கனிசமாகக் குறைந்துள்ளது. பயிர்ச் சேதங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
03.11.2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசின் G.O.(Ms).No.295 ஆணையின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியின் (ecologically sensitive area) எல்லையில் இருந்தும், யானை வலசைப் பாதைகளில் இருந்தும், காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்தும் ஒரு கிலோ மீட்டர் ஆரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் கல்லுடைப்பதோ, சுரங்கம் தோண்டுவதோ கூடாது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது தடாகம் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பான 4600 ஹெக்டேரில் 3400 ஹெக்டேர் நிலத்தில் (74%) சுரங்கப்பணிகள் செய்யலாகாது; 1200 ஹெக்டேர் நிலம் மட்டுமே இதற்கு வெளியில் உள்ள பகுதியாகும்; அந்தப் பகுதியும் யானை உலாவும் பகுதியாகவும், அவற்றிற்கான வாழ்விடமாகவும், நீர் நிலை மற்றும் கிராமங்கள் உள்ள பகுதியாகவும் உள்ளது. அதுபோலவே, நாயக்கன்பாளையம்-கோவனூர் பள்ளத்தாக்கு முழுமையுமே மேற்கூறிய 1 கிலோமீட்டர் ஆரத்திற்குள் வந்து விடுகிறது. சோமையம் பாளையம் பகுதியானது தடாகம் பள்ளத்தாக்கில் இருந்து போளுவாம்பட்டி பள்ளத்தாக்கிற்குள் செல்லும் யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் சுற்றுச் சூழலைச் சிறப்பான முறையில் காத்திட முடியும் என்றாலும் கூட, தடாகம் பள்ளத்தாக்கையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்த ஆணையால் ஓரளவுதான் காப்பாற்ற முடியுமேயொழிய முழுமையாகக் காப்பாற்றிவிட முடியாது.
மேலதிகமான மனித எண்ணிக்கை மற்றும் நிலத்தடி நீரை வேண்டுகின்ற எந்தவொரு தொழிலையும் தடாகம் பள்ளத்தாக்கின் சுற்றுச்சூழலால் தாங்க இயலாது என்பதையே கடந்த கால் நூற்றாண்டுகால அனுபவங்களும், அறிவியல் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய கால கட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் நிலத்தடி நீரையும், சங்கனூர் நீரோடையின் நீரையும் நேரடியாக உபயோகிக்காத வாழ்வியலைக் கொண்டிருந்தனர். மழைநீரை மட்டுமே நம்பியிருந்த சோளம், அவரை, துவரை, கடலை மற்றும் தர்ப்பூசணி வேளாண்மையையும், மலை அடிவாரத்திலிருந்து மெதுவாக வழிந்தோடிவரும் நீரோடைகளின் நீரைக் கால்நடை மற்றும் மனிதர்களின் பயன்பாடுகளுக்காகவும் பல நூறு குட்டைகளில் (24) கடந்த 150 ஆண்டுகளில் தேக்கி அவர்கள் பெரு வாழ்வு வாழ்ந்தனர். இந்தக் குட்டைகளில் தேக்கப்பட்ட நீரால் நிலத்தடி நீர் உயர்ந்து, கோடைகாலத்திலும் மலை அடிவாரத்தில் உள்ள சுனைகளையும், மலையில் உள்ள துறைகளையும் வறண்டு போகாமல வைத்துக் கொண்டது. இதன் காரணம் மனிதர்களும், அவர்களைச் சுற்றியிருந்த விலங்குகளும் மோதல்களின்றி இணை வாழ்வு வாழ்ந்திருந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் இந்தக் குட்டைகள் யாவும் சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளால் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் இன்றுள்ள சின்னத்தடாகம் வருவாய் கிராமத்தில் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பொன்னி என்ற பெண்மணியால் தோண்டப்பட்ட 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னி ஏரியானது, 2021 அக்டோபர் - நவம்பரில் பெய்த பெரு மழைக்குப் பின்னரும் கூட வறண்டே கிடக்கிறது.
கடந்த கால்நூற்றாண்டுகால சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிலால் சிதைந்து நிற்கும் தடாகம் பள்ளத்தாக்கினால் மனிதர்களும், வன விலங்குகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அந்த பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்பதற்கான முதல்கட்டப் பணியினை சென்னை உயர் நீதி மன்றமும், தெற்கு மண்டலப் பசுமைத் தீர்ப்பாயமும் தொடங்கியிருக்கின்றன. அந்தப் பணியானது செவ்வனே நிறைவேற தமிழ்நாடு அரசின் G.O.(Ms).No.295 உதவும். என்றாலும்கூட, சுரங்கப்பணிகள் அற்ற, ஆனால் அதே சமயம் மேலதிகமான மனித எண்ணிக்கை மற்றும் நிலத்தடி நீரை வேண்டுகின்ற பிற தொழில்களையும், செயல்பாடுகளையும் அதனால் கட்டுப்படுத்த இயலாது.
சட்டத்திற்குப் புறம்பாக செங்கல் தொழிற்சாலை நடத்தி வந்தவர்களில் சிலர் கடந்த ஆறு மாதங்களில் நிலக்கரிச் சாம்பல் கற்களை (fly ash bricks) உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களை அரசின் அனுமதி எதுவும் இன்றி தொடங்கியுள்ளார்கள். தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள ராமநாதபுரம் கிராமத்திலிருந்து வெறும் 280 மீட்டர் தூரத்தில் இப்படிப்பட்ட தொழிற்கூடம் ஒன்று துவங்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளது. மேலதிகமான நிலத்தடி நீரை இந்தத் தொழிற்கூடம் தன் பயன்பாட்டிற்காக இறைக்கத் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற, ஆனால் மிகப் பிரமாண்டமான நிலக்கரி சாம்பல் கல் தொழிற்கூடம் ஒன்றை பெரியதடாகம் அருகில் மலை அடிவாரத்தில் கருங்காலன் குட்டை என்ற நீர் நிலையை அடியோடு ஆக்கிரமித்து பெரு முதலாளி ஒருவர் தொடங்கியிருக்கிறார். மேலதிகமான நிலத்தடி நீரை இறைப்பதோடு மட்டுமன்றி, யானை வழித்தடத்தில் இயங்கப்போகும் இந்தத் தொழிற்கூடத்தில் பணியாற்றப்போகும் தொழிலாளர்களுக்கு மனித-யானை மோதல்களிலிருந்து பாதுகாப்பில்லை என்பது வெளிப்படை. மேலும், இந்தத் தொழிற்கூடத்திற்கான மூலப்பொருளான சாம்பலை தொழிற்கூடத்திற்கு எடுத்துச் செல்லும் லாரிகளும், அங்கிருந்து உற்பத்தி செய்யப்ப்ட்ட கற்களை வெளியில் கொண்டுபாகப்போகும் லாரிகளும் நீர்வழித் தடங்களையே தம் சாலைகளாக உபயோகிக்கப் போகின்றன. செங்கல் சுரங்கங்களால் தடாகம் பள்ளத்தாக்கின் நீராதாரத்திற்கும், வேளாண்மைக்கும் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும், அவற்றை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதும்தான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இதுபோன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு அரசின் G.O.(Ms).No.295 ஆணையால் கட்டுப்படுத்த இயலாது. கூடுதலாக, தடாகம் பள்ளத்தாக்கையும் அதைச் சுற்றியுள்ள நாயக்கன்பாளையம்-கோவனூர் மற்றும் சோமையம்பாளையம் பகுதிகளையும் சுற்றுச் சூழல் உணர்திறன் பகுதி (Ecologically sensitive Area - ESA) என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாணை மூலம் மட்டுமே பள்ளத்தாக்கின் சூழலை சேதப்படுத்த வாய்ப்புள்ள பிற தொழில்களுக்கு சட்ட ரீதியாக அனுமதி மறுக்க இயலும். ஏற்கனவே பாதிப்புக்குள்ளான நீரோடைகளையும், நிலப்பரப்பையும், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் மீட்டுருவாக்கம் செய்ய இந்த ஆணை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
எனவே, தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாயக்கன்பாளையம்-கோவனூர் மற்றும் சோமையம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 10,178.92 ஹெக்டேர் நிலப்பரப்பினை சுற்றுச் சூழல் உணர்திறன் பகுதியாக (Ecologically sensitive Area - ESA) அறிவிக்குமாறு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
...................
Reference:
Binu Thomas et al., “Ethnomedicinal Chasmophytes of Southern Western Ghats in Coimbatore District, Tamil Nadu, India” in Hamdard Medicus, Vol.54, No.3, July-September 2011.
KM Prabhukumar et al, “Validation and Documentation of Rare Endemic and Threatened (RET)
plants from Nilgiris, Kanuvai and Madukkarai forests of southern Western Ghats, India”, in Journal of Threatened Taxa 4(15):3436-3442, December 2012
Binu Thomas et al., “A new variety of Crotalaria ramosissima (Fabaceae) from Tamil Nadu, India”, Asian Pacific Journal of Tropical Biomedicine (2012)1-3
https://bhuvan-vec2.nrsc.gov.in/bhuvan/wms (ID:5294 erosion:TN_ERO50K_0506)
G.O.Ms.No.44 Dated:2.4.1990; G.O. MS.NO.49, DATED:24.03.2003; ANNEXURE-I TO G.O.Ms. NO.49 DATED 24-03-2003 - GoTN
K.Kasturirangan REPORT OF THE HIGH LEVEL WORKING GROUP ON WESTERN GHATS Volume I , 15 April 2013, p-93
MINISTRY OF ENVIRONMENT, FOREST AND CLIMATE CHANGE NOTIFICATION dated 3rd October, 2018 - S.O. 5135(E)
Saandhu, “Stuck in the days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” , December 2021 - Book
Reply from D.Venkatesh IFS, DFO, Cbe Division to Letter from District Collector Roc.No.5329/2021/2019/L dated:04.03.2021 RC.No.8360/2019/D1. dated 11.03.2021
மேல்பாவி, கீழ் பாவி, மண் பாவி, கருப்பராயன்கோவில் பாவி, நாத்துக்காடு பாவி, கரும்பாறை பாவி, மூலக்காடு பாவி, கடலரசி பாவி, மாமரத்துப்ப்பள்ளம் பாவி, பொன்னூத்து, அனு பாவி
அத்திமரத் துறை, ரங்கசாமித் துறை, நானல் துறை, ராக்கி பாவி, நவாக் கிணறு
Saandhu, “Stuck in the days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” , December 2021 - Book
[1335 ஹெக்டேர் பட்டா நிலம்; 565 ஹெக்டேர் நீரோடைகளின் கரை] - Saandhu, “Stuck in the days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” p-126; கொ.மோகன்ராஜ் 2021
மாநில சுற்றுச்சூழல் தாக்க ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகின்ற B1 Mining Cluster
Saandhu, “Stuck in the days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley”
W.P No.1064 of 2009 and M.P.No.1 of 2009 V.K.Mani Vs Chairman TNPCB; DEE, TNPCB, Erode; Velmurugan Brick Chamber; MoEF&CC Notification dated 22 February 2022 - G.S.R. 143(E).
TNPCB Inspection Committee Report dated 08.01.2020
Saandhu, “Stuck in the days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” , December 2021 - Book
W.P.No.28475 of 2019; W.P.No. 27356 of 2019
ந.க.10/கனிமம்/2019 தேதி 29.10.2019
No.119 of 2021(SZ)
RTI data from Forest department dated 17.8.2021 obtained by Thadagam S.Ganesh அலுவலகக் கடித எண் ப2/5524/2021
தேப்பண்ணன் குட்டை, பொள்ளி குட்டை, கல்வியானூர் குட்டை, பறையன் குட்டை, சீரா காளி குட்டை, வண்ணான் குட்டை, கருங்காலன் குட்டை, செங்குட்டை, சின்பாசன் குட்டை, தொட்டுபாசன் குட்டை, அரபி குட்டை, லிங்கப்பன் குட்டை, புதுக் குட்டை, நஞ்சுண்டாபுரம் குட்டை, ஆலமரக் குட்டை, மாமரக் குட்டை
வணக்கம் சாந்தலா உங்களுடைய கட்டுரைகள் எங்களுடைய தினசரி நாளிதழில் வெளியிட வேண்டுமா அணுகவும்6383190566
ReplyDelete