தடாகம் பள்ளத்தாக்கினையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுற்றுச் சூழல் உணர் திறன் பகுதியாக (Ecologically Sensitive Area - ESA) உடனடியாக அறிவிக்க வேண்டும். ஏன்?
சாந்தலா 30/06/2022 தடாகம் பள்ளத்தாக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும் . கோயம்புத்தூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக் காடானது , இந்தப் பள்ளத் தாக்கினை வடக்கு , மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் குதிரை லாடம் போல சூழ்ந்துள்ளது . இந்தக் காப்புக் காடுகளில் இருந்தும் , இந்தப் பள்ளத்தாக்கில் இருந்தும் நொய்யல் நதியின் முக்கியமான கிளை நதியான சங்கனூர் பள்ளம் உருவெடுக்கிறது . பிரம்மகிரி - நீலகிரி - கிழக்குத் தொடர்ச்சிமலை யானைகள் நிலப்பரப்பின் ( Brahmagiri-Nilgiri-Eastern Ghat Elephant Landscape ) ஒரு பகுதியான கோயம்புத்தூர் யானைகள் காப்பகத்தின் ( Coimbatore Elephant Reserve) ஒரு அங்கமாக இந்தப் பள்ளத்தாக்கு திகழ்கிறது . 24- வீரபாண்டி , 23- சின்னத் தடாகம் , 22- நஞ்சுண்டாபுரம் , பன்னிமடை ஆகிய நான்கு வருவாய் கிராமங்களைக் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கு , கோயம்புத்தூர் வடக்குத் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது . தடாகம் பள்ளத்தாக்கும் , அதற்கு வடக்கில் உள்ள நாயக்கன்பாளயம் - க...