சாந்தலா
வறட்சியும் வெள்ளமும் தமிழ்நாட்டின் தலைவிதி என்பதே இன்றைய நிலை. கடுமையான வறட்சிதான் விதி என்றாலும் கூட தமக்குக் கிடைக்கும் மழை அளவிற்கு ஏற்றவாறு இஸ்ரேல் போன்ற நாடுகளின் அரசுகள் தம் நாட்டின் நீர் ஆதாரத்தைக் கைகொள்ளும் நடைமுறைகளை உருவாக்கிக்கொண்டன. மத்திய கால ராஜஸ்தானிலும் இதுபோன்ற அற்புதத் தகவமைப்புகள் நடந்தேறின. ஆனால் கடந்த அரை நூற்றாண்டின்போது வறட்சியாலும் வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பினும் தனது நீர்பிடிப்புப் பகுதிகளுடனும் நீர் வழித் தடங்களுடனும் தமிழக அரசு தான் கொண்டிருக்கும் உறவினை மாற்றி அமைத்துக் கொள்ளவில்லை. அதற்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தை இன்றுவரை நிர்வகித்த அரசியல் கட்சிகளோ இதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனை மாற்றுவதற்கு இனியாவது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் குறிஞ்சி நிலமும், நவீன கால அரசுகளின் நடவடிக்கைகளும்
1800 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை தமிழகத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியும், ஆங்கிலேய அரசும் அவர்தம் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இங்கு பல்வேறு பாடங்களை கற்றறிந்தனர்.
கப்பல்களைக் கட்டுவதற்கு இங்கிலாந்து நாட்டின் காடுகளில் உள்ள ஓக் மரங்களை வெட்டக் கூடாது என்ற சட்டம் 1772 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பதிலாக தமிழகத்தின் காடுகளில் கிடைத்த தேக்கு மரங்களை கிழக்கிந்தியக் கம்பெனி தனது கப்பல்களைக் கட்டுவதற்காக தொடக்கத்திலிருந்தே உபயோக்கிக்கத் தொடங்கியது. பிறகு, ரயில் தண்டவாளங்களை அமைப்பதற்காகத் தமிழகத்தின் காடுகள் பெரிதளவில் அழிக்கப்பட்டன. ஒவ்வொரு மைல் தூரத் தண்டவாளத்திற்கும் 860 கட்டைகள் தேவைப்பட்டன. 1860 இலிருந்து 1910 ஆம் ஆண்டுவரை உள்ள 50 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 50 ஆயிரம் மைல் நீளமுள்ள தண்டவாளங்கள் நிறுவப்பட்டன. இந்த செயல்பாட்டிற்குத் தேவையான மரங்களை அறிவியல் அடிப்படையில் அளிப்பதற்காக 1864 ஆம் ஆண்டு இந்திய வனத்துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக டையறிச் பிராண்டிஸ் என்ற ஜெர்மானியர் நியமிக்கப் பட்டார்.
வனத்தில் வாழும் பழங்குடிமக்கள் வனத்தில் சுதந்திரமாக உலவுவதற்கான தடையை 1865 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வனச் சட்டம் கொண்டு வந்தது. மரங்கள் உள்ள எந்த ஒரு நிலத்தையும் அரசிற்கு சொந்தம் என்ற ஆணையை அரசு பிறப்பிப்பதற்கான அதிகாரத்தையும் அந்த சட்டம் ஆங்கிலேய அரசிற்கு வழங்கியது. இந்த அதிகாரத்தினை 1878 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வனச் சட்டம் மேலும் கடுமையாக்கியது. வனக் கல்லூரிகள் திறக்கப் பட்டன. வன எல்லைகளை அளந்து வரைபடங்களை உருவாக்கும் செயல்பாடுகள் தொடங்கின. வனத்தினை நிர்வகிப்பதற்கான செயல் திட்டங்கள் தீட்டப்பட்டன.
1878 ஆம் ஆண்டின் வனச்சட்டமானது காடுகளைக் காப்புக் காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் கிராமக் காடுகள் என்ற மூன்று பிரிவாகப் பகுத்தது. வர்த்தக ரீதியில் காப்புக்காடுகள் மிக முக்கியமானவை என்றும் அவற்றைத் தொடர்ச்சியாக அரசு தனது தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் சட்டம் கூறியது. பாதுகாக்கப்பட்ட காடுகளில் வனப் பழங்குடியினருக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டன என்றாலும் கூட அடுத்து வந்த கால கட்டங்களில் இந்தவகைக் காடுகள் அதிக அளவில் காப்புக்காடுகளாக மாற்றப்பட்டன.
அகில இந்திய அளவில் இயற்றப்பட்ட இந்த 1878 ஆம் ஆண்டின் வனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டிற்கான மெட்ராஸ் வனச் சட்டம் 1882 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 1882 ஆம் ஆண்டு முதல் 1890 ம் ஆண்டு வரை வனத்தின் மூன்று பகுதிகளான காப்புக் காடு, பாதுகாக்கப்பட்ட காடு மற்றும் கிராமக் காடுகளின் எல்லைக் கோடுகள் தெளிவாக, தீர்மானகரமாக நிறுவப்பட்டன. இவ்வாறுதான் கோவையின் தடாகம் காப்புக்காடு 1884 ஆம் ஆண்டிலும், போளுவாம்பட்டி காப்புக் காடு 1885 ஆம் ஆண்டிலும் அறிவிக்கப்பட்டன.
1870 களில் தமிழக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. அடுத்த வந்த 15 ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து போனது. மரங்களே இனி இல்லாமல் போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டபோது காடுகளில் மரங்களை மீண்டும் வளர்க்க வேண்டும் என்று 1894 ஆம் ஆண்டில் வோல்க்கர் என்ற ஜெர்மானிய விவசாய நிபுணர் யோசனை தெரிவித்தார். அதன் அடிப்படையில் உருவான வோல்க்கர் தீர்மானத்தின்படி காடுகளில் மரம் நடும் நடவடிக்கை துவங்கியது. இந்த நடவடிக்கைகள அனைத்தையும் கடுமையாக்கியது 1927 ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டம்.
அழிக்கப்பட்ட தமிழ்நாட்டின் மழைக் காடுகள்
தனியார் வசம் உள்ள நிலங்களில் உள்ள வனங்களை காக்க தமிழ்நாடு தனியார் வனங்ளை காக்கும் சட்டம் 1949 ஆம் வருடம் இயற்றப்பட்டது. என்றாலும் கூட,
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதியானது முந்தைய 9895 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்து 1975 ஆம் ஆண்டில் 8395 சதுர கிலோ மீட்டராகக் குறைந்துபோனது (15% இழப்பு). இதற்குக் காரணம் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த தமிழக அரசானது 1882 ஆம் ஆண்டின்போது வரையறை செய்யப்பட்ட காப்புக் காடுகளின் நிலங்களை 1950-60 களின்போது எவ்வித முன்யோசனையும் இன்றிப் பல்வேறு பணிகளுக்காக (சுரங்கப் பணி, அணைக் கட்டு, விவசாயம் போன்ற) பிரித்தளித்ததுதான். இதன் காரணமே தமிழகத்தின் ஒட்டுமொத்த வனப் பரப்பளவானது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் வெறும் 16% ஆகக் குறைந்து போனது.
மேலும், இதே காலகட்டத்தில் நம் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் வனப்பரப்பளவு 28,043 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் இருந்து 11,251 ஆகவும் (60% வனம் அழிக்கப்பட்டது), கர்நாடகத்தின் வனப்பரப்பளவு 31,530 சதுரக் கிலோமீட்டர் அளவிலிருந்து 23,472 சதுரக் கிலோமீட்டராகவும் (16% இழப்பு) குறைந்துபோனது. சுதந்திரத்திற்குப் பிறகு புதிதாக வந்த மாநில அரசுகளின் தெளிவற்ற முடிவுகளின் காரணமே இந்தக் காடுகள் அழிக்கப்பட்டன.
இதனைத் தடுப்பதற்காகவே 1980 ஆம் ஆண்டின் வனச் சட்டம் இயற்றப்பட்டது. வனத்தைப் பிற பயன்களுக்காக அனுமதிக்கும் ஏகபோக உரிமை இனி மாநில அரசிற்கு இல்லை என்றும், வன நிலங்களைப் பிற பயன்களுக்கு அளிக்க வேண்டும் என்றால் அதற்கென்று மத்திய அரசின் அனுமதியையும் இனி பெற்றாக வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் அறிவித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அரசின் தவறான வனக்கொள்கையால் தமிழக வனப்பகுதியில் பைன், தைலம் (யுக்கலிப்டஸ்), சீகை மரங்கள் 11,000 ஹெட்டேர் புல்வெளிகளில் நடப்பட்டு ஆற்றின் முக்கியமான நீர்பிடிப் பகுதிகள் அழிக்கப்பட்டன. மீதமுள்ள புல்வெளிகள் சோலைக்காடுகளிடம் இருந்து பட்டா பூமிகளாக மாற்றப்பட்டுத் தனியாரிடம் கொடுக்கப்பட்டது. தற்போது நீலகிரியில் மட்டும் 45,974 ஹெட்டேர் புல்வெளிகள் மற்றும் சோலைக்காடுகள் தேயிலை தோட்டங்களாக மாறியுள்ளது. இதை பசுமைப் பாலைவனம் என்றே கூறமுடியும். மேலும் நீலகிரி மலைகளில் உள்ள தண்ணீரை சேமிக்கும் சதுப்பு நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு கேரட், பீட்ரூட் காய்கறி தோட்டங்களாக மாற்றப்பட்டன. இதுபோலவே, வால்பாறையில் 230 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பசுமை மாறா காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களாக மாற்றப்பட்டன. தமிழக ஆறுகளின் நீர்வரத்தானது தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வனப் பரப்பளவை நம்பி இருக்கும் ஒன்று என்ற அடிப்படை உண்மையை அரசின் இந்த நடவடிக்கைகள் மறந்து போயின. மாநில நீராதரத்தின் மூலமான இந்த நிலப்பகுதியின் பரப்பளவு 61,410 சதுர கிலோமீட்டரில் இருந்து 43,118 சதுர கிலோமீட்டராக 1950-60 களில் (30% இழப்பு) குறைந்துபோனது.
1882 ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தவறான நில மேலாண்மை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டிற்குள் ஓடும் நதிகளின் நீர் வரத்துக் குறைந்து போனது. இந்த நடவடிக்கையினால், ஆறுகள் வடிகால்களாக மாறி மழைக்காலங்களில், மண் அரிப்பு மற்றும் வெள்ளங்களுக்கான காரணமாக அமைந்தது.
1950-60 களில் கேரள, கர்நாடக, தமிழகத்தை ஆண்ட மாநில அரசுகளின் தவறான கொள்கையே இந்த அழிவுப் போக்கிற்கான முக்கிய காரணமாய் அமைந்தது. இந்த அரசுகளின் அழிவு நடவடிக்கைகளை மேலும் தொடராது இருப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் 1980 ஆம் ஆண்டின் இந்திய வனச் சட்டம். மழைக் காடுகளின் எஞ்சிய பகுதிகளை அழிவில் இருந்து இந்தச் சட்டம் காத்தது என்றாலும் கூட 1882 வனச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஆனால் அடுத்து வந்த காலகட்டங்களில் மீறப்பட்டு அழிக்கப்பட்ட வன நிலங்களை மீண்டும் வன நிலங்களாக மாற்ற் வேண்டிய அத்தியாவசியப் பணியை அது மேற்கொள்ளவில்லை. காடுகளை முறையற்ற அழிவில் இருத்து தடுக்கும் 1980 ஆம் ஆண்டின் வனச் சட்டத்தில் புதிதாக காடுகளை உருவாக்க நிலங்களை கையகப்படுத்த வழிவகை இல்லை. ஆனால் 1882 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழக வனச் சட்டத்தை கொண்டு நிலங்களை கையகப்படுத்த முடியும். இதன் காரணமே, தமிழகம் இன்று வறட்சியையும் வெள்ளத்தையும் தன் தலைவிதியாகக் கொள்ள வேண்டியுள்ளது.
கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களின் உதவியின்றியே தாமிரபரணி, வைகை, அமராவதி, ஆழியாறு, நொய்யல், பவானி, மோயாறு, தென் பெண்ணை, பாலாறு போன்ற ஆறுகளின் நீர்வரத்தை 1882 வனச்சட்டத்தினைக் கைகொண்டு அந்த சட்டத்தால் வனமாக நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் வனமாக அறிவித்து, மழைவனங்களை உருவாக்குவதன் மூலம் பெருமளவில் கூட்டிட முடியும். அந்த நடவடிக்கையே தென் இந்தியாவில் மண் அரிப்பையும், வெள்ளப்போக்கையும் தடுத்திடும் முதல்கட்ட நடவடிக்கையாகவும் இருக்கும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றால் 1882 வனச்சட்டம் வனநிலமாக நிர்ணயம் செய்த நிலங்களைப் பல்வேறு முயற்சிகளால் அவற்றைத் தமதாகக் கைகொண்ட பெருந்தனக் காரர்களின் பெருஞ் சினத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
ஆயினும், தமிழ் நாட்டு மக்களின் நலனை மனதில் கொண்டு இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டால் வறட்சி தமிழகத்தை விட்டு விலகும்.
Ref:
- Tamil Nadu Forest Act, 1882
- The Indian Forest Act ,1927
- The Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948
- Forest Conservation Act, 1980
- Forest Management in Tamil Nadu - A Historical Perspective
- Berthhold Ribbentrop, Forestry in British India, 1900
- Aditya Kumar Joshi, National Forest Policy in India: Critique of Targets and Implementation, Small-scale Forestry (2011) 10:83–96 DOI 10.1007/s11842-010-9133-z
- Mark Poffenberger, Forest management partnerships: regenerating India's forests, Unasylva, January 1993
- C Sudhakar Reddy, Assessment and monitoring of long-term forest cover changes (19202013) in Western Ghats biodiversity, J. Earth Syst. Sci. No. 1, February 2016, pp. 103114
- Hanqin Tian et al., “ History of land use in India during 1880–2010: Large-scale land transformations reconstructed from satellite data and historical archives”, Global and Planetary Change 121 (2014) 78–88
May atlist your voice should reach out my dear all the best
ReplyDelete