எனது “Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” புத்தகத்திற்கு உலக சூழலியல் நிபுணரும், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் இயக்குனருமான பேராசிரியர் பி.ஏ.அஜீஸ் அவர்கள் அளித்துள்ள முன்னுரை:
சுற்றுச் சூழல் மீது மனிதனால் தினிக்கப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றால்
உருவாகியுள்ள விளைவுகள் குறித்த மற்றுறொரு புத்தகம் அல்ல இது. மனித நேயம்,
தேடுதல் மற்றும் உள்ளுணர்வு கொண்ட இளம் பெண் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள
சமூகவியல் மற்றும் சூழலியல் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து அதன் இன்றைய
நிலைக்கான காரணங்களை வெளிக்கொண்டு வர எழுதிய புத்தகமே இது. கடந்த பல
ஆண்டுகளாகத் தன்னைச் சுற்றியுள்ள நிலம் எப்படிப்பட்ட மாற்றத்திற்கு உள்ளாகி
வருகிறது என்பதனைக் கூர்ந்து கவனித்துவந்த அவரை அன்மையில் வந்த மழை
நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தினை எழுதத் தூண்டியுள்ளன. உள்ளுர் நில
வெளியானது எப்படிப்பட்ட கொடூரமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது
என்பதனை அவர் இந்தப் புத்தகத்தில் மிகவும் நிதானமாகவே முன்வைக்கின்றார்;
எனினும், வரவிருக்கும் நாட்கள் குறித்து அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்;
மாற்றத்துக்குள்ளாகியிருக்கும் தன்னைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கினை அதன்
முந்தைய சூழலியல் நிலைக்குக் கொண்டு செல்கின்ற புத்துயிர் அளிக்கும்
செயல்பாடுகளில் ஈடுபடத் துடிக்கும் அவர், நம்பிக்கை நிறைந்த உறுதிமிக்க
ஒரு இளைஞி.
மிகவும் முக்கியமான நுண் நீர்ப்பிடிப்புப் பகுதி
(micro-watershed) ஒன்று சந்தித்து வரும் நெருக்கடி மிக்க சூழலியல்
பிரச்சினையை ஆராய்ந்து அதற்கான தரவுகளை ஆவணப்படுத்தியிருக்கும் அவரது
செயல்பாடானது ஆழமான அறிவியல் மற்றும் அதி நவீன தொழில்நுட்பங்களை
உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் சிதைவுக்குள்ளாக்கப்பட்ட நில வெளி ஒன்றில்
உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியின் இருத்தலும், செயல்பாடும் எப்படிப்பட்ட அதி
தீவிர நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கான அறிவியல் மற்றும்
அனுபவவியல் யதார்த்தங்களை முன்வத்துள்ள அவரது பணியை நான் வெகுவாகப்
பாராட்டுகின்றேன். பதின்ம வயதில் உள்ள ஒருவர் இந்தப் பணியை செய்திருப்பது
அற்புதம்.
கடந்த சில பத்தாண்டுகளாக செங்கல் உற்பத்தியின் மையம்
ஒன்றாக விளங்கி வரும் கோயம்புத்தூர் தடாகம் பள்ளத்தாக்கின் இன்றைய
சூழலியல், நீரியல் மற்றும் நில வடிவவியல் நிலையினை இந்தப் புத்தகம் மூலமாக
ஒரு விரிவான, விமர்சனரீதியிலான ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்திலிருந்து நீளும் இந்தப்
பள்ளத்தாக்கானது, காவிரி நதியில் கலக்கின்ற நொய்யல் நதியின் உப நதியான
சங்கனூர் பள்ளத்தின் வெள்ளப் பெருக்குச் சமவெளியாகும் (flood plain).
தடாகம் மலையில் இருந்து அதன் அடிவாரத்தில் பல லட்சம் ஆண்டுகளாகப்
படிந்துவரும் Colluvium என்ற குருணை மணலையே தடாகம் பள்ளத்தாக்கின் செங்கல்
சூளைகள் முழுமையாகச் சார்ந்துள்ளன. ஓடைகளும் (streams), சிற்றோடைகளும்
(brooks) நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கில் கடந்த சில பத்தாண்டுகளில் உருவான
செங்கல் சூளைகளால் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன; இந்த காலகட்டத்தில்
அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதன்
காரணமாக, இவற்றிற்கான மூலப் பொருளாக, அடிப்படைக் கச்சாப் பொருளாகத் திகழும்
செம்மண்ணை செங்கல் உற்பத்திக்காகப் பரந்த அளவில் தோண்டியுள்ளனர். இதன்
காரணமாக, இங்குள்ள அனைத்து விவசாய நிலங்களும் 10 மீட்டர் அழத்திற்கும்
மேலாகக் கூடத் தோண்டப்பட்டுள்ளன; இந்த செயல்பாடானது, இந்தப் பகுதியின்
அனைத்து நீரியல் கட்டமைப்புகளையும், சூழலியல் செயல்பாடுகளையும் மிகவும்
மோசமான அளவில் பாதித்துள்ளது. பெரும்பாலான செங்கல் சூளைகளும், அவற்றிற்கான
சுரங்கங்களும் ஓடைகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன; நீரோடைகள் இல்லாத
பகுதிகளிலும் சூளைகளும் சுரங்கங்களும் உள்ளன; இவை அனைத்தும் பள்ளத்தாக்கின்
சுற்றுச்சூழல் கட்டமைப்பையும், இயற்கை செயல்பாட்டையும் கடுமையான
சிதைவுகளுக்கு உள்ளாக்கியுள்ளன. பெருவாரியான அளவில் மண்ணை அகழ்ந்து
எடுக்கும் பணியோடு மட்டும் இவர்களது நடவடிக்கைகள் நின்றுவிடவில்லை; கன ரக
வாகனங்களும், மண்ணைத் தோண்டும் ராட்சத எந்திரங்களும், டிப்பர் லாரிகளும்,
விறகு லாரிகளும், நீரோடைகளின், விவசாய நிலங்களின் தரையைப் பல லட்சம் தடவை
தமக்கான சாலைகளாக உபயோகித்ததன் காரணமாக அவை கெட்டிதட்டிப் போயுள்ளன; இதன்
காரணமாக, அவற்றின் இயற்கையான மண் தன்மையும், நீரியல் கட்டமைப்பும், நீரோட்ட
அமைப்பும் சிதைவுக்குள்ளாகியுள்ளன. இந்தத் துயரமான சூழ்நிலையிலுருந்து
தடாகம் பள்ளத்தாக்கினை எளிமையான பொறியியல் தீர்வுகளை வைத்து மட்டுமே
காப்பாற்றிவிட முடியாது என்று ஆசிரியர் மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார்.
செங்கல் சூளை முதலாளிகளோ, அவர்தம் செயல்பாடுகளால் எத்தகைய நீண்ட காலப்
பாதிப்புகள் உருவாகப் போகின்றன என்பது குறித்த எவ்வித அக்கறையும் கொள்ளாமல்
தமது அதிகார பலத்தை உபயோகித்துத் தம் சூளைகளின் செயல்பாடுகளைத் தொடர
கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்; எனவே, இந்த நிலத்தினைக்
காப்பாற்ற அதிகாரிகளிடமிருந்து இனியும் கூடுதலான பரந்துபட்ச நடவடிக்கை
அவசியமாகிறது.
நிறைவாக, சூழலியல் தன் நிறைவு மற்றும் அனைத்து
மக்களின் நல வாழ்வு ஆகியவற்றை அடைவதற்காக அறிவியல் மற்றும் மனிதாபினக்
கண்ணோட்டத்தில் வரைபடங்கள் மற்றும் பிற தரவுகளை முன்வைக்க முடியும் என்பதே
இந்த ஆய்வுப் புத்தகத்தின் மையச் சிறப்பாகும். மிக ஆழமாகத் தோண்டி
சிதைக்கப்பட்டுள்ள தடாகம் பள்ளத்தாக்கினைப் பற்றிய இந்த இளம் பெண்ணின்
நேர்மையான ஆய்வும், ஆவணப்படுத்தல் முயற்சியும் அதற்கான பலனை அடைய வேண்டும்
என்று நான் உளமாற வாழ்த்துகிறேன். இதனை மனதில் கொண்டு தடாகம் பள்ளத்
தாக்கினையும், அதன் காட்டுயிரிகளையும், பறவைகளையும், சிறிய
பாலூட்டிகளையும், சூழலியல் அமைப்புகளையும் புத்துயிர் பெறச் செய்யும்
முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்;
சிலரின் நடவடிக்கைகளால் நன்றி மறந்து சிதைக்கப்பட்ட பொதுமக்களின்
வாழ்வியல் வெளி அதிகாரிகளின் இந்த முயற்சிகளால் மீண்டும் மேம்பட்டு
பெருவாரியான மக்களுக்கு பேருதவியாக அமையும் என்பது உறுதி.
பேராசிரியர் பி.ஏ.அஜீஸ்
முன்னாள் இயக்குனர்,
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்,
ஆனைக்கட்டி, கோவை
Comments
Post a Comment