“செழுமையில் வறுமை: தடாகம் பள்ளத்தாக்கின் நீரோடைகளின் விசித்திரமான நிலை” (Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley) என்ற புத்தகத்தை நான் 2021 டிசம்பர் மாதம் ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன்.
2021 அக்டோபர் நவம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் கொட்டிய பெருமழை, கோவை மாவட்டத்திலும் அங்குள்ள தடாகம் பள்ளத்தாக்கிலும் பெருவாரியாகப் பொழிந்தது. அந்த மழையின்போது தடாகம் பள்ளத்தாக்க்கில் நிகழ்ந்த விசித்திரமான நிகழ்வு ஒன்றே இந்தப் புத்தகத்தை நான் எழுதத் தூண்டிய முக்கியக் காரணமாகும்.
காவிரியின் முக்கிய உபநதிகளில் ஒன்றான நொய்யல் நதியின் கிளை ஆறான சங்கனூர் ஆறு (சங்கனூர் பள்ளம்) தடாகம் பள்ளத்தாக்கில் உருவெடுக்கிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் நீட்சியாகக் குதிரை லாடம் போல வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் அமைந்துள்ள மலைகளுக்கு உள்ளில் தடாகம் பள்ளத்தாக்கு கிழக்கு நோக்கி நீள்கிறது.
கோவை நகரின் வடமேற்கு எல்லையில் சுமார் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து வழிந்து ஓடும் சங்கனூர் ஆறு கோவை நகரத்தை இரண்டாகப் பிரிக்கிறது. நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ள சிங்காநல்லூர் ஏரியில் அது கலக்கும் போக்கில் நகரின் நிலத்தடி நீரை அது உயர்த்தியது.
வெள்ளத்திற்குப் பெயர்போன இந்த ஆறு, கோவை மாநகர வரலாற்றைத் தீர்மாணித்த மிக முக்கியக் காரணிகளில் ஒன்றாகும். 1710 ஆம் ஆண்டில் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அதன் கரையில் அமைந்திருந்த கிருஷ்ணராயபுரம் என்ற கிராமத்தை மூழ்கடித்தபோது, அங்கிருந்து வெளியேறி மேட்டுப்பகுதியில் குடியேறிய மக்களால் உருவாக்கப்பட்டதுதான் இன்று கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளாக உள்ள பீளமேடு (பூளை மேடு), ஆவாரம் பாளையம் மற்றும் உடையாம் பாளையம் ஆகும். இந்த ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்தி அதனை வேளாண் பணிகளுக்கு பயனுறச் செய்வதற்காக 1980-களில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கோவை நகரத்திற்கு வடக்கில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் முகவாயில் உள்ள கணுவாய்ப் பாளையம் கிராமத்தில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து இந்த ஏரிக்கான கால்வாய் புதிதாக வெட்டப்பட்டது. 1990 களில் இந்த ஏரி பலமுறை நிரம்பி அதுகாறும் வறண்டுகிடந்த கோவை வடபுற வெளியின் நிலத்தடி நீரை உயரச் செய்து அங்கு வேளாண் பணிகளை சிறப்படையச் செய்தது. நிரம்பிய சின்னவேடம்பட்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அதற்குக் கிழக்கில் அமைந்துள்ள சூலூர் ஆச்சான்குளத்தை நிரப்பி அதன் உழவர் பெருமக்களை மகிழ்வுறச் செய்தது.
ஆனால் 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை மாறிப்போனது. கணுவாய் தடுப்பணையைத் தாண்டிச் செல்லும் அளவிற்கு நீர் வரத்து இல்லாமல் போனது. சங்கனூர் ஆற்றின் நீருக்காக ஏங்கிக் கிடக்கும் நிலைக்கு சின்னவேடம்பட்டி ஏரியும், சிங்காநல்லூர் ஏரியும், சூலூர் ஆச்சான் குளமும் தள்ளப்பட்டன.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பெரு மழையின் போது கோவை நகரின் 22 குளங்கள் நிரம்பி வழிந்தன. சங்கனூர் ஆற்றின் 8 சிற்றோடைகளிலும் ஏற்பட்ட வெகுவான நீர்ப்பெருக்கு உயிரினங்களை மகிழ்வித்தது. என்றாலும்கூட, இந்த சிற்றோடைகளின் வெள்ளப் பெருக்கு ஏதோ காரணங்களால் கணுவாய் தடுப்பணையை அடைய இயலவில்லை. 20 ஆண்டுகாலம் சங்கனூர் ஆற்றிற்காக ஏங்கி வறண்டு கிடக்கும் சின்னவேடம்பட்டி ஏரியின் நிலை கணுவாய் தடுப்பணையைப் பீடித்துவிட்டதோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் உருவானது.
2021 ஜூன் மாதம் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது, வரும் ஆண்டில் கல்லூரிக்குச் செல்லாமல் நான் பிறந்து வளர்ந்த தடாகம் பள்ளத்தாக்கினை அறிவியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் அறிந்துகொள்ள வேண்டும் என்று தீர்மாணித்தேன். அதன் முதல் செயலாக, நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல்-நீரியல் பேராசிரியரான Dr. Hans van der Kwast அவர்களது யுடியூப் சேனலில் உள்ள பாடங்களின் மூலம் QGIS என்ற புவியியல் வரைபட மென்பொருளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். கூகுள் எர்த் மற்றும் க்யூ-ஜிஐஎஸ் மென்பொருட்களைக் கொண்டு தடாகம் பள்ளத்தாக்கினையும், அதன் நீரோடைகளையும் வரையத்தொடங்கியிருந்த எனக்கு அக்டோபர் மாதத்தின் பெருமழை பெருமகிழ்வைக் கொடுத்தது. ஓடைகளின் நீர்ப் பெருக்கின் தன்மையை நான் கண்டு மகிழ்வதற்காகவே இந்த மழை வந்துள்ளது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், சிற்றோடைளின் நீர்ப்பெருக்கு கணுவாய் தடுப்பணையை வந்தடையவில்லை என்பதைக் கண்டபோது கடுமையான மன உளச்சலுக்கு உள்ளானேன். அதற்கான காரணங்களை அறிய முற்பட்டேன்.
கணுவாயில் மேல் கீழ் என்ற இரண்டு தடுப்பணைகள் உள்ளன. 2010 ஆம் ஆண்டுவரை இந்த இரண்டு அணைகளுக்கும் நீர் வரத்து இருந்தது. 2010 க்குப் பிறகு கிழக்கு அணை வறண்டு போனாலும் மேற்கு அணை சிறிதளவாவது நிரம்பிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் இன்றோ, இந்தப் பெரு மழைக்குப் பிறகும் கூட அது வறண்டே காணப்பட்டது.
கூகுள் எர்த் மென்பொருளில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்குமான அதி அடர்த்திமிக்க (high resolution) செயற்கைக்கோள் படிமங்கள் கிடைக்கின்றன. அவற்றின் உதவி கொண்டு கணுவாய் மேற்குத் தடுப்பணைக்கு தண்ணீர் ஏன் வரவில்லை என்பதற்கான காரணங்களை அறிய முற்பட்டேன். அதற்கான முதல்கட்ட விடையையும் கண்டேன்.
அதுவரை வடமேற்கு-தென்கிழக்கு திசை நோக்கிப் பயணிக்கும் சங்கனூர் ஆறு மேற்குத் தடுப்பணையை அடைவதற்கு முன்பாக வளைந்து நெளிந்த வழித்தடத்தை எடுக்கிறது. எளிதில் அடைய முடியாத இந்தப் பகுதியில் சிற்றோடைகளின் நீரெல்லாம் தேங்கி நிற்பதைக் கண்டேன். 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நீரோட்டத்தினைத் தடுக்கும் நிகழ்வு இந்தப் பகுதியில் நிகழ்வதை செயற்கைக் கோள் படிமங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். அதற்கான காரணத்தைத் தேடியபோது நான் கண்ட பதில் என்னை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருந்தது.
உழவர் பெருமக்கள் வண்டல் மண்ணை கணுவாய் கிழக்குத் தடுப்பணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று 2015 ஜூன் மாதம் கோவை பொதுப்பணித்துறை அறிவித்தது. கூகுள் எர்த் செயற்கைக் கோள் படிமங்கள் அந்தப் பணி அந்த காலகட்டத்தில் தொடங்கிவிட்டதை உறுதி செய்கின்றன. எங்கள் வீட்டிற்கு வடக்கே 500 மீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தடுப்பணையைச் சுற்றியுள்ள தாவரங்களை 2015 ஜூன் 10 ஆம் தேதியன்று நான் படம் பிடிக்கச் சென்றிருந்தேன். அப்போது தற்செயலாகத் தடுப்பணைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் படமெடுத்திருந்தேன். அந்தப் படிமங்களில் ராட்சத மண் அள்ளும் எந்திரங்களையும், டிப்பர் லாரிகளையும் காண முடிகிறது. உழவர் பெருமக்களின் செயல்பாடாக இது இருக்க இயலாதே என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனை உறுதி செய்வதற்காக செயற்கைக் கோள் படிமங்களைப் பார்த்தபோது, அவற்றிலும் ராட்சத எந்திரங்களையும், டிப்பர் லாரிகளையும் ஆற்றின் தரையில் காண முடிந்தது. சரி, இங்கு மட்டும்தான் இது நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழ, மேற்குத் தடுப்பணையின் செயற்கைக் கோள் படிமத்தை ஆராய்ந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அங்கும் ராட்சத மண் அள்ளிகளும், டிப்பர் லாரிகளும் இருப்பதைக் காண முடிந்தது. அதற்கும் மேற்கில் உள்ள வளைவான பகுதியின் படிமத்தைப் பார்த்தபோது பேரதிர்ச்சி கொண்டேன்.
இந்த வளைவுப் பகுதியில் 2015 பிப்ரவரி மாதத்திலிருந்தே மண் அள்ளும் பணி தொடங்கி விட்டிருப்பதை அந்தப் படிமங்கள் வெளிப்படுத்தின. அதற்கு ஒரு கிலோமீட்டருக்கு மேற்கே அமைந்திருக்கும் தடுப்பணையின் தரையையும் ராட்சத மண் அள்ளிகளும், டிப்பர் லாரிகளும் பிப்ரவரி மாதம் தொட்டே சூழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.
ஆக, ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகளையும், இயந்திர மண் அள்ளிகளையும் கொண்டுள்ள அதிகாரம் மிக்க ஏதோ ஒரு கூட்டம் சங்கனூர் ஆற்றின் மணலை உழவர் பெருமக்களின் போர்வையில் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். கணுவாய் கிழக்குத் தடுப்பணையில் வண்டல் மண் எடுக்க உழவர் பெருமக்களுக்கு அனுமதி என்று 2015 ஜூன் மாதம் அறிவித்து விட்டு, மேற்குத் தடுப்பணையிலும், அதற்கு மேலுள்ள பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கும்பல் தோண்டத்தொடங்கியிருப்பதை செயற்கைக் கோள் படிமங்கள் உணர்த்தின.
எவ்வளவு மண் அள்ளப்பட்டது என்பதனை கூகுள் எர்த் மெண்பொருளில் உள்ள வாட்டத்தைச் (slope) சொல்லும் வசதியின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ள முடியும். இதன் உதவியுடன் இந்தப் பகுதியில் அள்ளப்பட்ட மண்ணின் கொள்ளளவையும், அதற்காக இந்த சிற்றாறுக்குள் நுழைந்த டிப்பர் லாரிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டேன்.
வளைந்த பகுதிக்குள் மட்டுமே சுமார் 2500 டிப்பர் லாரிகள் வந்து சென்றிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. கிழக்குத் தடுப்பணைக்குள் சுமார் 12,600 டிப்பர் லாரிகளும், மேற்குத் தடுப்பணைக்குள் 12,800 டிப்பர் லாரிகளும், வளைவுப் பகுதிக்கு மேற்கே அமைந்துள்ள தடுப்பணையில் சுமார் 9,000 டிப்பர் லாரிகளும் வந்து சென்றிருக்க முடியும் என்பதைக் கண்டறிய முடிந்தது.
ஆறு வளைந்து நெளியும் பகுதியில் மண் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட இரண்டு பெரும் பள்ளங்களின் காரணமாகவே அக்டோபர்-நவம்பர் பெருமழைக்குப் பிறகு சங்கனூர் ஆற்றின் 8 சிற்றோடைகளின் தண்ணீரால் கணுவாய் மேற்கு மற்றும் கிழக்குத் தடுப்பணைகளை அடைய இயலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
என்றாலும்கூட, 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு கணுவாய் கிழக்கு அணைக்குத் தண்ணீர் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு இதில் பதில் இல்லை. எனவே, தண்ணீர் வரத்து குறைந்திருப்பதற்கான காரணங்களை அறிய முற்பட்டேன்.
சங்கனூர் ஆற்றில் எட்டு ஓடைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான அனுவாவி-கருப்பராயன் ஓடையைப் படிக்கத் தொடங்கினேன். இந்த ஓடைக்கு சுமார் 19 சிற்றோடைகள் நீரை வழங்குகின்றன. அவற்றின் வாட்டம் (slope), அவற்றின் கரை, மற்றும் தரை ஆகியவை கூகுள் எர்த்தில் உள்ள செயற்கைக்கோள் படங்களில் எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வுக்குள்ளாக்கினேன். இந்த சிற்றோடைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துமே மலைகளில் இருந்து தோன்றும் முதல் கட்ட சிற்றோடைகளாகும் (first order streams).
மலையில் இருந்து அவை பள்ளத்தாக்கிற்குள் இறங்கிய உடனேயே அவற்றின் கரையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. (கூகுள் எர்த் மென்பொருளானது 2005 ஆம் ஆண்டிலிருந்துதான் செயல்படத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளுக்கான செயற்கைக் கோள் படிமங்களை அதில் காண முடியும் என்றாலும்கூட அவை அதி அடர்த்திமிக்க படிமங்கள் இல்லை என்பதால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் இந்தப் பகுதி எவ்வாறிருந்தது என்பதை இவற்றிலிருந்து அறிவது கடினமான பணியாகும்).
இந்தப் பள்ளங்கள் அனைத்துமே செங்கல் சூளைகளுக்காகத் தோண்டப்பட்ட சுரங்கங்களாகும்.
இவ்வாறு தோண்டப்பட்ட சுரங்கங்களை சிற்றோடைவாரியக வரிசைப் படுத்தி அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் குறியீட்டை அளித்தேன். ஒவ்வொரு சுரங்கத்தின் பரப்பளவையும், ஆழத்தையும் கூகுள் எர்த்தில் உள்ள விசைகளின் மூலம் கண்டறிந்தேன். இந்தத் தரவுகளைக் கொண்டு சுரங்கங்கங்களின் கொள்ளளவை அறிந்தேன். இவ்வளவு மண்னை எடுத்துச் செல்ல எத்தனை டிப்பர் லாரிகள் தேவைப்பட்டிருக்கும் என்பதைக் கணக்கிட்டேன். இந்த சுரங்கங்களை அடைய இந்த டிப்பர் லாரிகளால் சாலைகளாக உபயோகப்படுத்தப்பட்ட வழித்தடங்கள் எவை என்பதை அறிய முயற்சித்தேன். அதற்கான விடையும் கிடைத்தது. அதிர்ந்து போனேன்.
இந்த டிப்பர் லாரிகள் அனைத்தும் சிற்றோடைகளின் தரையையும் கரைகளையும்தான் தம் சாலைகளாக உபயோகித்தன என்பதை அறிந்தபோது கலங்கி நின்றேன். இந்த சிற்றோடைகளில் எத்தனை முறை எத்தனை டிப்பர் லாரிகள் சென்றன என்பதைக் கணக்கிட்டேன்.
தோண்டப்பட்ட மண்ணை சிற்றோடைகளின் வழியாகக் கொண்டுவந்து செங்கல்லாக மாற்றி உலர வைக்கும் கூடங்கள் பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. உலர்ந்த செங்கல்கள் வேகவைப்பதற்காக டிராக்டர்கள் மற்றும் லாரிகளைக் கொண்டு செங்கல் சூளைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. விறகு, முந்திரிப் பொட்டு, ரப்பர், கழிவு எண்ணை ஆகியவை சூளைகளில் செங்கல்லை வேக வைக்க உபயோகப்படுத்தப்பட்டன. வெகுதூரத்தில் இருந்து இவற்றைக் கொண்டுவந்த லாரிகள் இந்த சூளைகளை அடைவதற்கு சிற்றோடைகளையே சாலைகளாக உபயோகித்தன. வெந்த கற்களை வெளியே எடுத்துச் செல்லும் லாரிகளும் இவற்றையே சாலைகளாக மாற்றியிருந்தன.
2006 ஆம் ஆண்டிலிருந்து எனக்குக் கிடைத்த இந்தத் தரவுகள் மூலம் பள்ளத் தாக்கின் மலையோரங்களில் செம்மண் சுரங்கங்கள் உள்ளதையும், மையப் பகுதியில் செங்கல் உருவாக்கம் மற்றும் உலர வைத்தல் கூடங்கள் இருப்பதையும், இவை இரண்டுக்கும் இடையில் உள்ள எல்லையில் செங்கல் சூளைகள் அமைந்திருப்பதையும் அறிந்துகொண்டேன். எந்தெந்த சிற்றோடைகள் சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன என்பதை வரைபடமாக்கினேன்.
சுமார் 1300 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அனுவாவி-கருப்பராயன் நீரோடையின் நீர் பிடிப்புப் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 47 சுரங்கங்கள் நீரோடைகளின் கரைகளில் அமைந்திருந்ததைக் கண்டேன். இங்கு வெட்டியெடுக்கப்பட்ட மண்ணை வேக வைக்க இந்தப்பகுதியில் 34 ராட்சத சூளைகள் இருப்பதை அறிந்தேன். அவற்றை வரைபடங்களாக்கினேன்.
2006 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சுரங்கங்கள், எத்தனை சூளைகள் புதிதாக இந்தப்பகுதியில் உருவாக்கப் பட்டன என்பதற்கான தரவுகளையும் வரைபடங்களாக மாற்றினேன்.
அனுவாவி கருப்பராயன் ஓடையில் உள்ள 19 சிற்றோடைகளின் கரைகளில் வெட்டப்பட்ட 47 சுரங்கங்களில் இருந்து மட்டுமே 14 ஆண்டுகளில் குறைந்தபட்சம் சுமார் 37 லட்சம் கன மீட்டர் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்ணை செங்கல் உற்பத்தி மற்றும் உலர் கூடங்களுக்கு சிற்றோடைகளின் வழியாகக் கொண்டு செல்ல சுமார் 4.3 லட்சம் டிப்பர் லாரிகள் அவசியம். உலர் கூடங்களில் இருந்து அவற்றை வேக வைக்கின்ற சூளைகளுக்கு பச்சைச் செங்கல்லை எடுத்துச் செல்ல சுமார் 12 லட்சம் லாரிகள் அவசியமாகியிருக்கும். இந்த மண்ணிலிருந்து சுமார் 184.3 கோடி செங்கல்கள் தயாரிக்கப் பட்டிருக்கும். இவற்றை சிற்றோடைகளின் வழியாக சந்தைக்குக் கொண்டு செல்ல சுமார் 6 லட்சம் லாரிகள் அவசியம். செங்கல்களை வேக வைப்பதற்கு சுமார் 24 ஆயிரம் லாரிகளில் சிற்றோடைகள் வழியாக 4.6 லட்சம் டன் விறகும், 28 ஆயிரம் டன் முந்திரிப் பொட்டும் சூளைகளுக்குள் ஏற்றி வரப் பட்டன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்களுக்கு சுமார் 184 கோடி லிட்டர் நிலத்தடி நீர் தேவைப்பட்டது. சுமார் 15 கிலோமீட்டர் நீளமுள்ள சிற்றோடைகள் சாலைகளாக மாற்றப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சிற்றோடைச் சாலைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 615 லாரிகள் இடைவிடாது சென்று வந்தன.
கடந்த 14 ஆண்டுகளில் நிகழ்ந்த பெரு மழைகளின் போது இந்த ஓடையின் கரையில் உள்ள 47 சுரங்கங்களில் ஓடையின் நீர் எந்தெந்த சுரங்கங்களில் கசிந்து வெளியேறியது என்பதற்கான தரவுகளையும் கூகுள் எர்த் செயற்கைக் கோள் வரலாற்றுப் படிமங்களில் இருந்து குறித்துக் கொண்டேன்.
தடாகம் பள்ளத் தாக்கில் உள்ள பிற 8 ஓடைகளின் கரைகளில் எத்தனை சுரங்கங்கள் உள்ளன என்பதை கூகுள் எர்த் மென்பொருளில் எண்ண முடிந்தது. அனுவாவி கருப்பராயன் ஓடையோடு சேர்த்து மொத்தம் 325 கரையோரச் சுரங்கங்கள் இருக்கின்றன. அனுவாவி கருப்பராயன் ஓடை குறித்த எனது தரவுகளின் அடிப்படையில் இந்த 325 சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண் செங்கல்லாக மாற்றப்பட்டு சந்தைக்கு செல்கின்ற வரை நடந்த செயல்பாடுகளை உத்தேசமாகக் கூறிட முடியும்.
தடாகம் பள்ளத்தாக்கின் ஓடைகளின் கரைகளில் இருந்து மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 2.25 கோடி கன அடி மண் தோண்டப்பட்டிருக்க வேண்டும். அதிலிருந்து சுமார் 1130 கோடி செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு சுமார் 53 லட்சம் டிப்பர் லாரிகளும், 1.5 லட்சம் விறகு லாரிகளும், சுமார் 30,000 டன் விறகும், முந்திரிப் பொட்டும், 1130 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரும், 75 லட்சம் பச்சைக் கல் லாரிகளும், சந்தைக்கு எடுத்துச் செல்லும் 75 லட்சம் வெந்த கல் லாரிகளும் அவசியம். சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓடைகளின் கரை செம்மண் சுரங்கங்கங்களுக்காக வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது.
ஓடைகளின் கரைகளில் இல்லாத செம்மண் சுரங்கங்களை நான் எண்ணவில்லை. அவற்றின் எண்ணிக்கை இதை விடக் கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சுரங்கங்களுக்கும் மேற்கூறிய சிற்றோடைகளின் வழியாகத்தான் செல்ல முடியும் என்பதை இங்கு குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தடாகம் பள்ளத்தாக்கின் சிற்றோடைகளின் கரைகள் செம்மண் சுரங்கங்களால் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கணுவாய் தடுப்பணைகளுக்கு நீர் வராமல் போனதற்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். ஓடைகளின் தரையோ, பல லட்சம் கனரக வாகனங்களால் கெட்டியாக்கப்பட்டு அங்கு காலம் காலமாக வாழ்ந்துவந்த உயிரினங்கள் முழுமையாக இல்லாமல் ஆக்கப் பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு சட்ட விரோதமாக இயங்கி வந்த செங்கல் தொழிற்சாலைகளால்தான் என்பதற்கான மறுக்க முடியாத தரவுகளை எனது புத்தகம் முன் வைக்கின்றது.
கூடுதலாக, இந்தப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நான்கு வருவாய் கிராமங்களில் ஒன்றான 24 வீரபாண்டி, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக (Ecologically Sensitive Area - ESA) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள ஒட்டுமொத்த நீரோடைகளில் 60% இந்த கிராமத்தில்தான் அமைந்துள்ளது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் சின்னத்தடாகம், 22 நஞ்சுண்டாபுரம் ஆகிய கிராமங்கள் சூழலியல் அடிப்படையில் மெண்மையானவை (Ecologically Fragile) என்று வகைப்படுத்தப்பட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மலைதளப் பாதுகாப்புப் பகுதிக்குள் (Hill Area Conservation Authority - HACA) வருகிறது.
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்று இந்தப் பள்ளத்தாக்கில் யானைகளின் வழித்தடம் இருப்பதை உறுதி செய்கிறது. அந்த வழித்தடத்தினை ஆனைக்கட்டி-வீரபாண்டி யானை வழித்தடம் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு குறிப்பிடப்படும் வழித்தடத்தில்தான் செம்மண் சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன.
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) செயற்கைக்கோள் பிரிவான புவன் (Bhuvan) இந்தப்பள்ளத்தாக்கின் ஐந்து பகுதிகளை பல்வேறுவகை மண் அரிப்பிற்கு உள்ளாவதாகக் குறித்துள்ளது. இந்தப் பகுதிகள் அனைத்துமே சுரங்கங்கள் தோண்டப்பட்ட பகுதிகளே.
பெரியதடாகம் கிராமத்திற்கு அருகாமையில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த மக்களின் ஈமத்தாளிகளும், சூதுபவள மணிகளும், தமிழி எழுத்தில் எழுதப்பட்ட பானை ஓடு ஒன்றும் 2015 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி நிபுணர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டன. வீரபாண்டி புதூர் மற்றும் 22 நஞ்சுண்டாபுரம் ஆகிய கிராமங்களின் எல்லைகளிலும் இதுபோன்ற தாளிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் செங்கல் தொழிலானது சுவடின்றி அழித்து விட்டிருக்கிறது.
மேலும் கணுவாய் மலையில் புதிது புதிதாக தாவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அழியும் நிலையில் உள்ள பல தாவரங்கள் இங்கு இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தையும் எனது புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளேன்.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு மனித இனம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதியின் இயற்கையை நன்கு அறிந்த இரண்டு இனக்குழுக்களான இருளர் மற்றும் முத்தரையர் பெருங்குடி மக்கள் இங்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்றாலும் கூட, இப்பள்ளத்தாக்கின் பெரிய கிராமங்கள் அனைத்தும் கடந்த 500-600 ஆண்டுகளுக்குட்பட்டே தோன்றியிருக்க வேண்டும் என்பதற்கான சிற்சில சான்றுகள் உள்ளன.
இன்று சுமார் 50,000 மக்கள் இந்தப் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளில் இங்கு உருவெடுத்த செங்கல் தொழிற்சாலைகளால் இவர்களது உயிரியல் கூறுகள் மாற்றத்துக்குள்ளாகியிருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அந்த சந்தேகத்தினை உறுதி செய்யும் சிற்சில சான்றுகளும் உள்ளன.
2000-2005 ஆம் ஆண்டுகளின்போது இங்கு வசித்து வரும் பெரும்பாலானோருக்கு அவர்களின் தோலிற்குக் கீழ் கட்டிகள் தோன்றத் தொடங்கின. இந்தக் கட்டிகளின் விளைவு அன்றாட வாழ்வைப் பாதிக்கவில்லை என்றாலும்கூட, அவற்றினால் எதிர்காலத்தில் என்ன விளவுகள் ஏற்படலாம் என்பதற்கான ஆய்வுகள் இல்லை. மேலும், தோலிற்குக் கீழ்தான் இந்தக் கட்டிகள் உள்ளனவா அல்லது உள் உறுப்புகளிலும் அவை ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு அங்கொன்றும் இன்கொன்றுமாக மட்டுமே தரவுகள் கிடைக்கின்றன. கொழுப்பு ஈரல் (Fatty Liver), கர்ப்பப்பையில் ஏற்படும் நார் கட்டிகள் மற்றும் முட்டைப் பையில் ஏற்படும் கட்டிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை கூடியிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள். 2005-2010 ஆம் ஆண்டுகளின்போது இந்தப் பகுதி மக்களில் பலரை ( குடும்பத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர்) இரண்டாம் வகை நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)(Type II Diabetes) தாக்கியது. சர்க்கரை நோயாலும், பல்வேறுவகை புற்று நோயல்லாத கட்டிகளாலும் உழன்றுகொண்டிருந்த இந்த மக்களில் பலர் 2010-2015 காலகட்டத்தில் நீடித்த சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) (கிட்னி செயலிழப்பு) பீடிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்தால் மட்டுமே சில காலம் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். இதுவே பள்ளத்தாக்கின் முகவாய் பகுதியில் சிறுநீரக சிறப்பு மருத்துவமனை ஒன்று உருவாகக் காரணமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் ஈரல் நோய்ப் புற்றுநோய்கள் பலரைத் தாக்கத் தொடங்கின. மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் இளம் பிராயத்தினர் பலர் பாதிக்கப்பட்டு இறந்தும் போயினர். செல்வநிலை, சாதி, பாலினம் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் மேற்கூறிய மாற்றப்போக்குகளைக் காண முடிகிறது. இன்றளவும் இந்த நிலை தொடர்கின்றது.
இந்தக் காரணங்கள் அனைத்தையும் மனதில் கொண்டு, தடாகம் பள்ளத் தாக்கினை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி எனது புத்தகத்தை நிறைவு செய்திருக்கிறேன்.
Shanthala Ramesh This Paper was submitted to the District Environmental Engineer at the Public Hearing conducted at Ernavur for the ETPS Expansion Project on 20 December 2024 Abstract: Ennore Thermal Power Station (ETPS) Expansion Project is haunting the Flood Challenged citizens of Chennai. It is being planned at a site that is low lying and flood prone. The site was repeatedly inundated in 2005 and 2023. It was one of the most affected by the 2023 December Oil Spill from CPCL. However, the EIA Report has not bothered to study and understand about the flood threats to the site. Instead it has doctored the data relating to site’s distance from the nearby Kosasthalaiyar River to get the mandatory Environmental Clearance. The CRZ Map for the Area shows the Project’s Ash Ponds located with in the Flood Hazard Line. Filling up the site to increase its altitude in order to become inundation free is put forward as the solution. However, if the site’s altitude is increased, ...
அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவசியமான சிறப்பான ஆழமான ஆய்வு அலசல் வரலாறு வாழ்த்துக்கள்..
ReplyDeleteசூழலியல் மீது கொண்ட பெரும்காதலால் தீவிர செயல் தளத்துடன் மேற்கொள்ளப்பட்ட உங்களது ஆய்வு கோவை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உயிர் வாழ்வையும் மிக சிறப்புடன் சுத்தி காட்டப்பட்டிருப்பது உங்கள் ஆய்வின் மீது பெரும் மதிப்பையும் அன்பையும் என்னிடம் ஏற்படுத்துகிறது வாழ்த்துக்கள் தோழர் வாழ்த்துக்கள் நாங்கள் சொல்லாவிட்டாலும் உங்கள் அக்கறைகொண்ட ஆய்வு தொடரவே செய்யும். இப்பதிவை பார்க்கச் செய்த எங்கள் ஊர் எனது அன்பு நண்பர் டீ சுப்பிரமணிய ராஜாவுக்கும் நன்றிகள்
ReplyDeleteமிகச்சிறப்பான செயல். உங்களின் ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள். மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteமனம் பதறுகிறது.இயற்கையை பற்றிய புரிதல் இல்லாத, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அரசியல் வியாதிகளிடம் என்ன நன்மையை எதிர்பார்க்க முடியும். மக்களை இணைத்து செவிடாக, குருடாக இருக்கும் அரசுகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி குரல் கொடுக்க வேண்டும்.
ReplyDeleteசங்கனூர் நீர் வழிபாதையின் விரிவான விளக்கம் தங்களது உழைப்பிற்கு சான்று.கடந்த 2006 பிறகு ஒரு சில முறைதான் கணுவாய்-பன்னீர்மடை வழி செல்லும் தடுப்பணை நிரம்பி பார்த்திருக்கிறேன் அதன் பிறகு இன்றளவும் காண முடியவில்லை..பதிலாக பலமுறை லாரிகளில் செங்கற்கள் நிரம்பி பல முறை விபத்திற்குள்ளானது பார்த்திருக்கிறேன்..இந்த கொடுமை அறங்கேற முக்கிய காரணமே அங்கே இருக்கும் செங்கள் சூழைகளின் முதலாளிகளே ஊராட்சி அதிகார தலைவர்களாக இருக்கிறார்கள்...நிச்சயமாக இந்த கொடுமையை மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
ReplyDeleteசங்கனூர் நீர் வழிபாதையின் விரிவான விளக்கம் தங்களது உழைப்பிற்கு சான்று.கடந்த 2006 பிறகு ஒரு சில முறைதான் கணுவாய்-பன்னீரமடை வழி செல்லும் தடுப்பணை நிரம்பி பார்த்திருக்கிறேன் அதன் பிறகு இன்றளவும் காண முடியவில்லை..பதிலாக பலமுறை லாரிகளில் செங்கற்கள் நிரம்பி பல முறை விபத்திற்குள்ளானது பார்த்திருக்கிறேன்..இந்த கொடுமை அறங்கேற முக்கிய காரணமே அங்கே இருக்கும் செங்கள் சூழைகளின் முதலாளிகளே ஊராட்சி அதிகார தலைவராக இருக்கிறார்கள்...நிச்சயமாக இந்த கொடுமையை மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
ReplyDeleteWow amazing work fit for a Ph.d thesis. Sincere thanks for your interest and efforts Amidst threat from kiln mafia.
ReplyDeleteதங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்...
ஒரு ஆய்வு நிறுவனம் செய்ய வேண்டிய பணிகளை தனி ஒரு இளம் அறிவியலாளர் செய்து முடித்து இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. மென்மேலும் இத்தகைய ஆய்வுகளை செய்து சமூகப் பணி ஆற்ற எம் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteமிகச் சிறப்பான பதிவு. சங்கனூர் பள்ளம் என்று கோவை மக்களால் தற்போது அறியப்படும் சங்கனூர் ஆறு என்பதற்கு இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொண்டோம் தங்கைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete